தேர்தல் ஆணையர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம் - விளக்கம் கேட்டும் சுப்ரீம் கோர்ட்
- அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
- இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது.
2023 இல் மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனம், பதவிக்காலம் மற்றும் அவர்களுக்கான சட்டபாதுகாப்பு குறித்த சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த சட்டத்தின் பிரிவு 16, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு வாழ்நாள் சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
அதாவது, தேர்தல் ஆணையர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யும்போது செய்யும் செயல்கள், எடுக்கும் முடிவுகளுக்காக அவர்கள் பதவியில் இருக்கும்போதும் அல்லது பதவி விலகிய பின்னரும், எந்தவொரு நீதிமன்றமும் அவர்கள் மீது சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது.
இதை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கூட குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநர்களுக்கோ இத்தகைய வாழ்நாள் கால பாதுகாப்பை வழங்கவில்லை.
ஆனால், இந்தப் புதிய சட்டம் தேர்தல் ஆணையத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மாற்றுகிறது" என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், நமது அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ் இத்தகைய பாதுகாப்பை வழங்க முடியுமா, முடியாதா? என்று ஆராய வேண்டியுள்ளது என்று கூறி, இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
அதேநேரம் மனுதாரர் கேட்டதற்கு இணங்க இப்போதைக்கு அந்தச் சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள்மறுத்துள்ளனர். எனினும், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணை தொடரும் என்றும் தெரிவித்தனர்.
எஸ்ஐஆர் பணிகளில் பாஜகவுடன் சேர்ந்து ஞானேஷ் குமார் தலைமையிலான மத்திய தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.