சென்னை மாநகராட்சியை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
- இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்
- பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பெருங்குடி குப்பைக் கிடங்கு, தற்போது பசுமை நிறைந்த Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
'பயோ-மைனிங்' தொழில்நுட்பம் மூலம் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு, அந்த நிலம் Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது
இந்த மாற்றத்தைப் பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பல தசாப்தங்களாகக் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்த பெருங்குடி கிடங்கு, சென்னை மாநகராட்சியின் தீவிர முயற்சியால் தற்போது மரங்கள் மற்றும் நடைபாதைகள் கொண்ட அழகிய பூங்காவாக உருமாறியுள்ளது.
இதைச் சாதித்துக் காட்டிய சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகள். இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா பதிவுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், நன்றி திரு. ஆனந்த் மஹிந்திரா.. சென்னை மாநகராட்சி, மொத்தம் 90 லட்சம் மெட்ரிக் டன் பழமையான குப்பைகளில் இருந்து, பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
மீதமுள்ள குப்பைகளை பிப்ரவரி 2027-க்குள் அகற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தற்போது, குப்பைகளை நிலத்தில் கொட்டுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதிலும், திறமையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி, அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைத் தீர்வுகளைச் செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.