செய்திகள்

வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2018-12-20 18:00 GMT   |   Update On 2018-12-20 18:00 GMT
வலங்கைமான் அருகே வெண்ணாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே புலவர்நத்தம் பகுதியில் தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையிலும், ஒரு சில இடங்களில் இளம் பயிராகவும் உள்ளது. இந்த நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் வெண்ணாற்றில் தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்.

மேலும் எருமைபடுகை முதல் தென்குளவேலி, நெம்மேல்குடி, இருகரை, மகிமாலை வரையிலான வெண்ணாற்றில் மணல் திருடப்படுவதையும், ஆற்றுக்கரை சேதப்படுத்துவதையும் கண்டித்தும், இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் புலவர்நத்தத்தில் நேற்று விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News