செய்திகள்

நிவாரணப் பணிகளை தி.மு.க.வினர் தொடர்ந்து செய்ய வேண்டும்- தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2018-12-01 08:04 GMT   |   Update On 2018-12-01 08:04 GMT
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை தி.மு.க.வினர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

இயற்கைப் பேரிடராம் கஜா புயல் கோரதாண்டவம் ஆடிமுடித்த பகுதிகளில் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கிராமங்கள் பலவற்றுக்கு மின் வசதி கிடைக்காததால் இருளிலேயே மூழ்கியுள்ளன. குடிசைகளை இழந்தவர்கள் பரிதவிக்கிறார்கள். தென்னை, வாழை, நெற்பயிர் எல்லாம் சாய்ந்து விவசாயிகளின் வாழ்வைச் சாய்த்துப் பறித்திருக்கிறது.

நாட்டுக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டத்தின் மக்கள் நடுவீதியில் நின்று, தங்கள் உணவுக்காக உதவியை எதிர்பார்த்திருக்கும் அவலத்தைப் பார்க்கும் மனதிடம் இதயமுள்ள எவருக்கும் இல்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகால வாழ்வையும் சேமிப்பையும் சூறையாடி விட்டது கஜா புயல். முழுமையாக மீண்டு வருவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும் என்றாலும், பேரிடரை எதிர் கொள்ளும் அந்த மக்களின் மனவலிமை பிரமிக்க வைக்கிறது.

தி.மு.க.வின் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. கழக சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியமும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களிலிருந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதற் கட்டமாக சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 11 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைக் கொடியசைத்து அனுப்பும்போது, அவற்றில் இரண்டு வாகனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க ஆவண செய்துள்ளேன்.

இழந்த குடிசைகளுக்கு இழப்பீடு தரப்படுவதுடன், கான்க்ரீட் வீடு திட்டம் வெற்று அறிவிப்பாக முடிந்துவிடக் கூடாது என்ற உறுதிமொழியையும்தான். தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.1100 என்பது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது.

ஒரு மரத்துக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்குவதுடன், புதிய தென்னங்கன்றுகளையும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்குத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பே சரிவர நிறைவேறாத நிலையில் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும் மற்ற கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை செலுத்த காலநீட்டிப்பு வேண்டும், கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் டெல்டா மக்கள். நியாய விலைக் கடைகளில் டிசம்பர் மாதத்திற்கான மண் எண்ணையை நவம்பரிலேயே வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

ஆனால், இருமாத காலத்திற்கான மண்எண்ணையை விலை கொடுத்து வாங்கும் சக்தி, புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் இல்லை. நியாய விலைக் கடைகள் மூலமாக அவர்களுக்கு இயன்றவரை இலவசமாகப் பொருட்கள் கிடைக்க வழி கண்டிட வேண்டும்.

மத்திய அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். அவர்களின் காலில் விழுந்து பெண்கள் கதறிய காட்சிகளும் செய்திகளும் மனதை உலுக்குகின்றன. எத்தகைய இழப்புகள் ஏற்பட்டிருந்தால், இப்படி உதவி கேட்டு அழுதிருப்பார்கள்!


இரண்டு வாரங்கள் கடந்தும் இயல்பு நிலை திரும்பாமல் இருட்டிலும் சேற்றிலும் சகதியிலும் வானமே கூரையாக கட்டாந்தரையே பாயாக வாழவேண்டிய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் சுற்றும் பிரதமருக்கு இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டின் பாதிப்புகளை விமானத்தில் பறந்து பார்க்கக்கூட நேரமில்லை, விருப்பமில்லை. மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமான செயல்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவில்லை.

தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடியபோது அவற்றை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்பும் அளவுக்கு வேகம் காட்டிய மத்திய அரசும் அதற்குத் துணை நின்ற மாநிலஅரசும், தற்போது இயற்கைப் பேரிடரால் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாகத் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித மீட்புக் குழுவும் வரவில்லையே நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? எங்களை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகளின் மறைமுக செயல்பாட்டுக்கு கஜா பதிப்புகளைப் பயன்படுத்துகின்றனவா என்பது தான் மக்களின் சந்தேகமும் அச்சமாகவும் இருக்கிறது.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத காரணத்தாலும், அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மரணப் படுக்கையில் தவிக்கின்றன புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம்.

சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனைகள் நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்பது குறைவான தொகைதான். முழுமையான மதிப்பீடு எதுவும் செய்யாமல் அவசரக் கோலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தான். ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்கவும், கஜா புயலின் முழுமையான பாதிப்புகளை மதிப்பிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக் குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும் வலிமையையும் உணர்ந்து ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து, விரைவாக நிவாரணம் கிடைத்திட உதவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும் வாழ்வுரிமையை மீட்டிடவும் கழகத்தின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். கழக உடன்பிறப்புகளின் கரங்கள், துன்பத்தில் உழல்வோர்க்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்!.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
Tags:    

Similar News