செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தால் எந்தவிதமான பயனும் இல்லை- சரத்குமார்

Published On 2018-11-30 04:14 GMT   |   Update On 2018-11-30 04:14 GMT
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை என்று சரத்குமார் தெரிவித்தார். #MekedatuDam
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொது மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை வழங்கினார்.

புதுக்கோட்டை பகுதியில் ஆய்வு செய்தபோது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேரில் வந்து பார்த்த போது உண்மையான சேத விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பணிகள் செய்து வருகிறது.

அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. தமிழக அரசு தாங்களால் இயன்ற அளவு செய்து உள்ளது. மத்திய அரசிடம் இருந்து அதிக அளவு நிதி வாங்கி, இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும். அரசை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.


மேகதாது அணை பிரச்சனை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. தற்போது மத்திய அரசு ஆய்வுக்காக அனுமதி அளித்து உள்ளது வருத்தம் அளிக்க கூடிய செயல். அதற்காக அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவிதமான பயனும் இல்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று ஆய்வறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் உண்மை நிலையை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை மீண்டும் ஒரு ஆய்வு நடத்தி அதில் என்னென்ன கூறப்பட்டு உள்ளது. அதை மூடுவதற்கு என்னென்ன செய்யலாம் என தமிழக அரசு முடிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam #Sarathkumar #AllpartyMeeting
Tags:    

Similar News