செய்திகள்

ஹெலிகாப்டரில் பறப்பதற்காகவே ஓபிஎஸ்-இபிஎஸ் சென்றனர்: பிரேமலதா தாக்கு

Published On 2018-11-26 13:12 IST   |   Update On 2018-11-26 13:12:00 IST
புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூறச் செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் ஆசையில் இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். சென்றுள்ளனர் என பிரேமலதா குற்றம்சாட்டினார். #GajaCyclone #PremalathaVijayakanth #EPS #OPS
கொடைக்கானல்:

கொடைக்கானலில் கஜா புயல் தாக்குதலால் சேதமடைந்த அப்சர்வேட்டரி, புதுக்காடு, கல்லறை மேடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் எதிர்கட்சி வரிசையில் கூட இல்லாவிட்டாலும் புயல் பாதிப்பை நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். முதல் கட்டமாக நாகை, வேதாரண்யம், தஞ்சை ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டோம்.

இன்று கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது மக்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட வராத நிலையில் நாங்கள் வந்து பார்வையிட்டது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதே தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல் சென்றது வேதனையளிக்கும் வி‌ஷயம். மக்களை சந்திக்காத துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை மக்கள் வரும் தேர்தலில் கண்டிப்பாக தோற்கடிப்பார்கள்.


புயலில் பாதித்த மக்களை நேரடியாக சந்திக்க முடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஹெலிகாப்டரில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்றது மக்கள் பிரச்சனைகளை கேட்பதற்காக அல்ல. ஜெயலலிதாவைப் போல் தாங்களும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசைபட்டு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள்.

புயல் தாக்குதல் முடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அரசு கேட்ட இடைக்கால நிவாரணத்தை கூட மத்திய அரசால் வழங்க முடியவில்லை. நிவாரணத்தை கேட்க கூட பயந்து எடப்பாடி பழனிசாமி அடிமை அரசு நடத்தி வருகிறார்.

விஜயகாந்த் தற்போது 2-ம் கட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழு உடல் தகுதி பெற்றவுடன் மக்களை சந்திப்பார். அவர் பேச ஆரம்பித்தவுடன் தற்போது உள்ள கட்சிகள் காணாமல் போய் விடும். மக்கள் செல்வாக்கு எங்களுக்கு உள்ளது என்பதை கண்டிப்பாக நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #PremalathaVijayakanth #EPS #OPS
Tags:    

Similar News