செய்திகள்

டெல்டா மாவட்டத்துக்கு மத்திய அரசு 3 குழுவை அனுப்பி சேதத்தை கணக்கிட வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2018-11-25 08:37 GMT   |   Update On 2018-11-25 08:37 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்துக்கு மத்திய அரசு 3 குழுவை அனுப்பி சேதத்தை கணக்கிட வேண்டும் என்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GajaCyclone #GKVasan
கும்பகோணம்:

த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கும்பகோணத்தில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இன்று அனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் இழக்க எதுவும் இல்லை என்ற அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப நிவாரணம் அறிவிக்க வேண்டும்.



கஜா புயல் பாதிப்பை கணக்கெடுக்க மத்திய அரசின் ஒரு குழு மட்டும் வந்துள்ளது. மாவட்டத்துக்கு ஒரு குழு வீதம் 3 குழுக்கள் வந்து டெல்டா மாவட்டங்களின் முழுபாதிப்பையும் கண்டறிந்து அதற்கேற்ப நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. வருமானம் முக்கியமா? மக்களின் வாழ்வு முக்கியமா? என்பதை கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவெடுக்க வேண்டும்.

மரங்கள், பயிர்கள் சேதமாகி வாழ்வதாரத்தை இழந்த விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும். நிவாரண பொருட்கள் த.மா.கா.சார்பில் புயல் நிவாரணத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை த.மா.கா. சார்பில் ரூ.45 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பை தனிக்குழு கண்காணித்து உடனடியாக உணவு, தண்ணீர் வசதி செய்து கொடுப்பதுடன் தங்கும் வசதிக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். மழையால் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளை தவிர்க்க சேதமான வீடுகளுக்கு தார்ப்பாய் வழங்க வேண்டும்.

தஞ்சை, பாபநாசம் பகுதியில் கடும் மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதற்கு உரிய காலத்தில் வடிகால்களை தூர்வாராமல் விட்டது முக்கிய காரணம் ஆகும். இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.

தமிழக அரசு மத்திய அரசிடம் புயல் பாதிப்புகளை கூறி உரிய நிவாரணத்தை வாதாடி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #GKVasan

Tags:    

Similar News