செய்திகள்

சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு செய்துள்ளேன்- முதலமைச்சர் பழனிசாமி

Published On 2018-10-22 08:04 GMT   |   Update On 2018-10-22 08:04 GMT
தமிழகத்தில் சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடக்காததால் மேல்முறையீடு செய்துள்ளதாக திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
திருச்சி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது ஏற்புடைய தல்ல என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுக்கோட்டை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக இன்று பகலில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சாலை அமைப்பதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முறைகேடு தொடர்பான புகாரில் நியாயமான விசாரணை நடத்தவே சி.பி.ஐ.க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் உயர்நீதிமன்றம் என் மீது எந்த குற்றமும் சொல்லவில்லை. முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் உள்ளதால் மேல்முறையீடு செய்துள்ளேன்.

கொள்ளிடத்தில் கதவணை கட்ட விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து டெண்டர் விடப்படும். காவிரியில் உபரிநீரை தடுத்து நிறுத்த ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பார்.

அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை கூடும் மக்கள் கூட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அ.தி.மு.க. ஒரு குடும்பம். அதனை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்களின் சதி திட்டத்தை தொண்டர்களின் ஆதரவோடு முறியடிப்போம். எப்போதுமே அ.தி.மு.க. நிலைத்து நிற்கும் என்றார்.


ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை திறம்பட செய்து வருகிறோம். எந்த பக்கத்தில் இருந்தும், எத்தனை சுனாமி வந்தாலும் உள்ளேயோ, வெளியிலேயே எங்களை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

2 பேரும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறோம். எங்களுக்குள் பிரிவினையை உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. அவர்களின் கனவு பகல் கனவாகத் தான் மாறும் என்றார். #ADMK #Edappadipalaniswami #OPanneerSelvam
Tags:    

Similar News