செய்திகள்

கார் உரசியதில் டிரைவருடன் தகராறு- ரோட்டில் தள்ளிவிட்டதால் லாரி மோதி ஆஸ்பத்திரி ஊழியர் பலி

Published On 2018-09-13 06:59 GMT   |   Update On 2018-09-13 06:59 GMT
மோட்டார்சைக்கிள் மீது கார் உரசியதால் ஏற்பட்ட தகராறில் மருத்துவமனை ஊழியரை தள்ளிவிட்டதால் லாரி மோதி அவர் பலியானார்.
பூந்தமல்லி:

தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு, ராம்ஜி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 42). தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை அவர் குன்றத்தூர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரியார் நகர் பஸ் நிலையம் அருகே வந்த போது அவ்வழியே சென்ற கால்டாக்சி ஒன்று சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக உரசியது.

இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் சண்முகத்துக்கும், கால் டாக்சி டிரைவர் மாங்காட்டை சேர்ந்த அப்துல் கரீமுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை கண்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சண்முகத்தை தள்ளியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்த அவர் சாலையோரத்தில் தடுமாறி நின்றார். அந்த நேரத்தில் குன்றத்தூர் நோக்கி சென்ற லாரி சண்முகம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் மகாதேவன், கால் டாக்சி டிரைவர் அப்துல் கரீம் ஆகியோரிடம்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூட்டத்தில் சமாதானம் பேசிய போது சண்முகத்தை தள்ளி விட்டது யார் என்றும் விசாரணை நடக்கிறது. #tamilnews
Tags:    

Similar News