செய்திகள்

உள்ளாட்சி துறையில் ஊழல் நடைபெற்றதாக நிரூபித்தால் இன்றே பதவி விலக தயார்- அமைச்சர் வேலுமணி

Published On 2018-09-12 06:54 GMT   |   Update On 2018-09-12 06:54 GMT
உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவியில் இருந்தும் இன்றே விலக தயார் என்று கோவை விமான நிலையத்தில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #TNMinister #SPVelumani
கோவை:

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கே : தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாகவும், மின்துறை அமைச்சர் தங்கமணி மின்வெட்டு துறை அமைச்சராக இருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் கூறி உள்ளாரா?

ப : தமிழகத்தை பொறுத்தவரை கடந்த தி.மு.க. ஆட்சியின் போது 16 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு பிரச்சனை இருந்தது. அப்போது நாங்கள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால் தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபடும் போது உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. மின்துறை அமைச்சர் வாரா வாரம் சிறப்புக்கூட்டம் நடத்தி வருகிறார். யார் கேட்டாலும் மின்இணைப்பு தரப்படுகிறது. மின்சாரத்துறையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று டி.டி.வி.தினகரன் பேசுகிறார் என்றால் அவர் 10 ஆண்டுகள் அம்மாவால் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் இதுவும் பேசுவார். இதற்கு மேலும் பேசுவார். திகார் ஜெயில் உள்பட எல்லா ஜெயிலையும் பார்த்த அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல தயாராக உள்ளார்.

கே : உள்ளாட்சி துறையில் ஊழல் குறித்து உரிய ஆதாரங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளாரே?


ப : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்வதை கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலை பார்க்கிறார். ஆர்.எஸ். பாரதி பியூன் வேலை பார்க்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க எங்கள் கட்சியில் பலர் உள்ளனர்.

உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்ததாக நிரூபித்தால் அமைச்சர் பதவி மட்டுமல்ல கட்சி பதவியில் இருந்தும் இன்றே விலக தயார். ஊழலை நிரூபித்தால் அரசியலை விட்டே செல்ல தயாராக இருக்கிறேன். அதே சமயம், ஊழலை நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் கட்சி தலைவர் பதவியையும், எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகி துரைமுருகன், அழகிரிக்கு பதவியை கொடுக்க தயாராக இருக்கிறாரா?

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SPVelumani
Tags:    

Similar News