செய்திகள்

அதிமுக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வராது- முத்தரசன்

Published On 2018-08-29 10:38 GMT   |   Update On 2018-08-29 10:38 GMT
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #CivicPolls
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மேலும் நேற்று தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை என்பது வரவேற்கத்தக்கது. அவர் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை எடுக்க போகிறார் என்பதை தெளிவாக அறிவித்துள்ளார். காவி தான் இன்றைக்கு பல பிரச்சனைகளை உருவாக்கி ஏற்படுத்தி வருகிறது.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றத்தால் அறிவிக்க செய்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அதனை சேமிக்க முடியாமல் 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க கடைமடை பகுதிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பொதுப்பணித்துறையின் அலட்சியமே காரணம்.

தூர் வாருவதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தாலும் முறைகேடுகள் நடந்து பணிகள் நடக்காததால் தான் நீர் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையவில்லை. மேலும் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததற்கு மணல் கொள்ளையே காரணம்.


தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறும் கருத்து ஏற்படையது. ஆனால் தகுந்த விழிப்புணர்வு அளித்து கால அவகாசம் அளித்து, அதன் பின்னர் அபராதம் விதிக்க வேண்டும். இப்போதே அதை கட்டாயமாக்க கூடாது.

தி.மு.க.வில் குடும்ப அரசியலால் தான் ஸ்டாலின் தலைவராக வந்துள்ளார் என்ற அ.தி.மு.க.வின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. கருணாநிதி 15 வயதில் தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் ஸ்டாலின் 14 வயது முதலே அரசியலுக்கு வந்து படிப்படியாக பல்வேறு வளர்ச்சியை பெற்றுள்ளார்.

கேரளாவில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தும் அரசு கேட்ட நிவாரண தொகை ரூ.21 ஆயிரம் கோடியில் 600 கோடிதான் நிதி ஒதுக்கியுள்ளது வேதனைக்குரியது. அரசியல் பாகுபாடு பார்க்காமல் உரிய நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும் அரபு நாடுகள் அளிக்கும் நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போதைய அ.தி.மு.க. அரசிற்கு பணம் சம்பாதிப்பது தான் ஒரே குறிக்கோளாகவும் அஜெண்டாவாகவும் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் வராது. தோல்வி பயத்தால் அவர்கள் நடத்த மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #CivicPolls #LocalBodyElection
Tags:    

Similar News