செய்திகள்

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்காதது பா.ஜனதாவுக்கு இழப்பு- திருநாவுக்கரசர்

Published On 2018-08-29 09:23 GMT   |   Update On 2018-08-29 09:23 GMT
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்காதது பா.ஜனதாவுக்குத்தான் இழப்பே தவிர தி.மு.க.வுக்கு இல்லை என்று திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin #BJP
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மறைந்த கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்ளாதது குறித்து பா.ஜனதாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் கலந்து கொள்ளாதது பா.ஜனதாவுக்குத்தான் இழப்பே தவிர தி.மு.க.வுக்கு இல்லை.

பா.ஜனதா தலைவர்கள் வருகைக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி நன்றாகத்தான் உள்ளது.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று தனது முதல் உரையிலேயே மத்திய அரசின் காவி மயமாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.


இதிலேயே பா.ஜனதாவுடன் ஸ்டாலின் எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லையா? தி.மு.க.வின் நிலை, பா.ஜனதாவின் காவிமயமாக்குதலை அகற்ற வேண்டும், மோடியை அகற்ற வேண்டும், இங்குள்ள ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் சார்பில் நான் வரவேற்கிறேன். பெரியார், அண்ணாவின் வழியில் ஸ்டாலின் வருகிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அவர்கள் பதவி ரத்தானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது, ஆட்சி கவிழும்.

ஏப்ரல், மே மாதத்தில் வரவேண்டிய நாடாளுமன்ற தேர்தல் முன் கூட்டியே டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் வர வாய்ப்பு உள்ளது. அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாக வைக்க முடியாது, இது சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin #BJP
Tags:    

Similar News