செய்திகள்

அப்போது அன்புமணி பதவி விலகினாரா?- ராமதாசுக்கு அமைச்சர் அன்பழகன் கேள்வி

Published On 2018-08-06 07:50 GMT   |   Update On 2018-08-06 07:50 GMT
அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்தபோது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று பதவி விலகினரா என ராமதாசுக்கு அமைச்சர் அன்பழகன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசில் எந்தத் துறையில் தவறுகள் நடந்திருந்தாலும் அந்த துறையை முழுமையாக ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும் இதில் நடைபெற்றுள்ள தவறுகளை முழுமையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உமாவுக்கு உடந்தையாக இருந்த விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசையும், உயர் கல்வித்துறையையும் குறைகூற பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு எந்தவித தகுதியும் இல்லை. தமிழகத்தில் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைத்து பொய்யான குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் கூறி வருகிறார். கடந்த தேர்தலில் பா.ம.க.வை மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

எந்த ஒரு தவறு நடந்தாலும் அதை அரசு தட்டிக்கேட்கவில்லை என்ற மாயையை உருவாக்கி கொண்டு டாக்டர் ராமதாஸ் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வகிறார்.

எங்களுக்கு மடியில் கனமில்லை. ஆகையால் வழியிலே பயம் இல்லை.


டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்தபோது அவருடைய செயலாளர் அறையிலேயே 1500 கிலோ தங்கமும், ரூ.1800 கோடியும் கைப்பற்றப்பட்டது. அப்போது மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி ராமதாஸ் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் பதவி விலகவில்லை.

தமிழக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிற்கே வழி காட்டும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உயர்ந்து நிற்கிறது. கடந்த 2017 - 2018ம் ஆண்டு அனைவரும் உயர்கல்விபெறும் நோக்கத்தில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்திய அளவில் 25.8 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து இருந்தாலும், தமிழகத்தில் 48.6 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #KPAnbazhagan #PMK #Ramadoss #AnbumaniRamadoss
Tags:    

Similar News