செய்திகள்

கடலூரில் 4-ம் வகுப்பு மாணவி காரில் கடத்தல்?: போலீசார் விசாரணை

Published On 2018-06-18 17:14 GMT   |   Update On 2018-06-18 17:14 GMT
4-ம் வகுப்பு மாணவி காரில் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்:

கடலூர் முதுநகரை சேர்ந்த 8 வயது சிறுமி கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டாள். ஆனால், அவள் பள்ளிக்கு செல்லவில்லை.

சிதம்பரம் பகுதியில் சாலையோரம் தனியாக நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த அவளது உறவினர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நீ மட்டும் தனியாக இங்கு ஏன் நிற்கிறாய்? என்று கேட்டார்.

அதற்கு, அந்த சிறுமி கூறும்போது, நான் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். என்னை ஒரு கும்பல் காரில் கடத்தினர். அந்த காரில் என்னை போல் 4 மாணவிகள் இருந்தனர்.

காரில் இருந்த நான் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டேன். ஆனால், அதற்குள் அந்த கும்பல் காரை வேகமாக ஓட்டி வந்தனர்.

சிதம்பரம் பகுதிக்கு வந்தபோது காரில் இருந்து நான் கீழே குதித்து தப்பினேன். பின்னர் அந்த கும்பல் காரை வேகமாக ஓட்டி தப்பி சென்று விட்டது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் அந்த சிறுமியை அழைத்து கொண்டு சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த விவரங்களை கூறினார்.

இதையடுத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவள் கொடுத்த தகவலின் பேரில் கடலூர், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியாக வரும் கார்களை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.

உண்மையிலேயே இந்த சிறுமி கடத்தப்பட்டாளா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்கலாமா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News