செய்திகள்

ஓமனில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை- மத்திய-மாநில அரசுகளுக்கு மீனவர் அமைப்பு நன்றி

Published On 2018-06-09 03:54 GMT   |   Update On 2018-06-09 03:54 GMT
ஓமனில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவித்தது.
சென்னை:

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமம், புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி சேவியர். இவருக்கு சொந்தமான ‘கவின் பிறைட்’ என்ற மீன்பிடி விசைப்படகில் அவருடன் சேர்த்து 10 மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது இயற்கை சீற்றத்தினால் விசைப்படகு இழுத்து செல்லப்பட்டு, ஓமன் கடல்பகுதிக்கு சென்றது. இதையடுத்து விசைப்படகையும், அதில் இருந்த 10 தமிழக மீனவர்களையும் ஓமன் கடற்படையினர் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி சிறைப்பிடித்தனர். கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் இயற்கை சீற்றத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டோம் என்று விளக்கமாக எடுத்துச்சொல்லியும் அவர்களை விடவில்லை.

இந்த நிலையில் மீனவர்கள் குடும்பத்தினரிடன் வேண்டுகோளுக்கிணங்க, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதன் அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஓமனில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவிக்கிறது. #tamilnews
Tags:    

Similar News