தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை இருந்தாலும் பொதுவாக டிசம்பர் மாதத்திற்குள் அதிகபட்ச மழை பெற்று முடிந்து விடும். ஜனவரி மாதத்தில் படிப்படியாக குறைந்து பருவமழை விலகி விடும்.
ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதத்திலும் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையையொட்டி மேலடுக்கு காற்றழுத்த சுழற்சி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் இடியுடன் மழையும் அதன் பின்னர் மழை குறைந்து 10-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 26 செ.மீ. மழை பதிவானது. தென்காசி மாவட்டம் கடனாஅணை 24 செ.மீ., குன்னூர் 21 செ.மீ., சிவகிரி 17 (தென் காசி), வீரபாண்டி (தேனி) 12, கோத்தகிரி (11 செ.மீ., சேரன் மாதேவி 10 செ.மீ. மழை பெய்துள்ளது.