திருச்செந்தூர் அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து 13 ஐயப்ப பக்தர்கள் காயம்
திருச்செந்தூர்:
சென்னை, திருவெற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருசாமி சந்திரன் என்பவர் தலைமையில் சுமார் 24 பேர் கடந்த 28-ந் தேதி சுற்றுலா வேனில் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கு தரிசனம் முடித்து விட்டு நேற்று குற்றாலத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை திருச்செந்தூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வேனை திருவெற்றியூரை சேர்ந்த முருகன் (வயது 31) ஓட்டினார். திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக இருந்த மரங்கள் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
அப்போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்களது உதவியுடன் வேனில் இருந்தவர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து வெளியேறினர்.
உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பிரசாந்த் (38), அபிஷேக் (21), சந்திரன் (51), ராகுல் (26) உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.