தமிழ்நாடு செய்திகள்
நீலகிரியில் கனமழை எதிரொலி: மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து
- மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது.
- மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டது.
மலை ரெயில் கல்லாறுக்கு சென்றபோது மண்சரிவு ஏற்பட்ட தகவல் வந்தது. உடனடியாக மலை ரெயில் கல்லாறில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இதனால் இன்று ஒரு நாள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.