செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை ஸ்டாலின் செய்கிறார்: வைகோ

Published On 2017-08-07 02:16 GMT   |   Update On 2017-08-07 02:20 GMT
எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்ய வேண்டுமோ அதை மு.க.ஸ்டாலின் செய்து கொண்டு இருக்கிறார் என வைகோ தெரிவித்தார்.
ஆலந்தூர்:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களை எல்லாம் பாரதீய ஜனதா கட்சி அழித்துவிட்டது. தமிழர் பண்பாடு, கலாசாரம், நாகரிகம் ஆகியவற்றை நாசப்படுத்திவிட்டது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து மீத்தேன் கியாஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவுக்கு லட்சோப லட்சம் கோடி வருமானத்துக்காக தமிழகத்தை பாழ்படுத்த திட்டமிட்டு உள்ளது என குற்றம் சாட்டுகிறேன்.

அங்குலத்துக்கு அங்குலம் நாங்கள் எதிர்ப்போம். திராவிட இயக்கத்தை நாசப்படுத்திவிடலாம் என்று பாரதீய ஜனதா கட்சி கணக்கு போடுகிறது. அது ஒரு நாளும் நடக்காது.

பெரியார், அண்ணா வார்பித்து இருக்கிற தமிழகம். அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரங்கள் என்பதால் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு தமிழகத்தின் நலனுக்கும், ஜனநாயகத்துக்கும் கேடு செய்கிறது என்பதற்கு ஆயிரம் காரணங்களை சொல்ல முடியும்.

அ.தி.மு.க. அரசு ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கலாம் என கருதுகிறது. திருமுருகன் காந்தி, ஜெயராமன் ஆகியோரை சிறையில் அடைத்து, மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தை ஏவுகிறது. இவை எல்லாம் வினையை விதைக்கிற வேலை. அடக்குமுறை மூலமாக கருத்துகளை நசுக்கி விட முடியாது என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம், “பாரதீய ஜனதா, அ.தி.மு.க. ஜனநாயகத்தை கெடுக்கும் போது தமிழக எதிர்க்கட்சி தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் சரியான முறையில் செயல்படுகிறாரா?” என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, “ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ன வேலையை செய்ய வேண்டுமோ அதை அவர் செய்துகொண்டு இருக்கிறார்” என வைகோ தெரிவித்தார். 
Tags:    

Similar News