ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவையில் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை
- ஆடி 18-ம் தினத்தன்று, தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது மக்களின் ஐதீகம்.
- ஆடி மாதம் 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை தினமும் சராசரியாக 70 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
கோவை,
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆடி 18-ம் தினத்தன்று, தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது மக்களின் ஐதீகம். நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் வழக்கத்தை விட அதிக ளவில் கூட்டம் காணப்பட்டது.
கோவையில் உள்ள நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதனால் கடைவீதி பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:- ஆடி மாதம் 1-ந் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை தினமும் சராசரியாக 70 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
ஆடிப்பெருக்கு தினமான நேற்று கோவை மாவட்டம் முழுவதும் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டன.
இதன் மதிப்பு ரூ.120 கோடியாகும். பெரும்பாலும் சிறிய ரக நகைகளான மோதிரம், தோடு, குறைந்த சவரனில் தயாரிக்கப்பட்ட செயின் உள்ளிட்ட நகைகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.
இவற்றை தவிர்த்து வளையல்கள், ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட நகைகளும் விற்பனையாகின.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.