உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்- அனல் காற்றால் மக்கள் அவதி

Published On 2025-04-11 10:14 IST   |   Update On 2025-04-11 10:14:00 IST
  • ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
  • வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஈரோடு:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.

வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News