லைஃப்ஸ்டைல்

‘செல்போனால்’ குடும்ப வாழ்க்கையில் விரிசலா?

Published On 2019-05-17 03:37 GMT   |   Update On 2019-05-17 03:37 GMT
அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். ஆனால் இரு மனங்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது, இங்குள்ள வாழ்வியல் முறையும், கலாசாரமும் வேறு வேறு. இங்கே பல்வேறு இனங்கள், பல்வேறு வாழ்க்கை முறையைக் கையாளுகிறார்கள்.

இவர்கள் பேசும் மொழிகளும் தனித்தனியாக வழங்கி வருகிறது. இந்தியாவில் விடுதலைக்கு முன்பு பலதார மணம் வழக்கமாக இருந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் செய்துகொள்ளவும், சொத்திற்காக வயதானவருக்கு சிறுமியைப் பூப்பெய்தும் முன்பே திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது. அதை தவிர்க்க அரசாங்கம் பெண்களுக்குத் திருமண வயதை பதிநான்காகவும், ஆண்களுக்கு பதினெட்டாகவும் இருந்து நாளடைவில் பெண்ணுக்கு திருமண வயது பதினெட்டாகவும், ஆணுக்கு இருபத்தொன்றாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூக அமைப்பைப் பொறுத்தவரை விடுதலைக்கு முன்பு பெண்களுக்கு சமூக உரிமைகள், ஓட்டுரிமை எதுவும் கிடையாது. அதைப்போல கல்வியும் அவர்களுக்கு மறுக்கப் பட்டது. ஆனால் படிப்பிலும், வேலையிலும் பெண்கள் வெகுவாக முன்னேறி சம நிலையை எட்டும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் திருமணத்தில் சம படிப்பும், வேலையும் பெண்களுக்கு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. உலகமயமாக்கல் கொள்கை மூலம் அன்னிய வியாபாரிகளை நுழைய வழி கொடுத்துவிட்டதால், மேலை நாட்டுக் கலாசாரத்தை இந்திய கலாசாரம் சுவீகரிக்க ஆரம்பித்தது. தவிரவும் கல்வி கற்று வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் அந்தக் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு சுயமிழக்கின்றனர்.

ஆனால் திருமணம் என்று வரும்போது மட்டும் தாய் நாடு, குடும்பம் ஆகியவற்றை முன்னிறுத்தி மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்கின்றனர். மணமான தம்பதியினர் மேலை நாட்டுக் கலாசாரத்தை விரும்ப, இடையே ஏற்படும் முரண் பிரச்சினையாகிறது. பெண்களைச் சமமாக ஏற்க தயங்கும் சமூகத்தில் அவர்கள் படித்ததால் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும், உரிமை கோருகிறார்கள் அல்லது எடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு பழமையில் இருந்து மாறுவதால் வாழ்வில் நெருடலை உண்டாக்குகிறது. அதனால் மணமக்கள் சட்டப்படி பிரிய நினைக்கிறார்கள்.

விவாகரத்து சட்டத்தின்படி விருப்பமில்லா தம்பதியரை பிரிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சேர்ந்து வாழ சாத்தியக்கூறு இருக்கிறதா என்று ஆராயக் கால அவகாசமும், உளவியல் கலந்தாய்வும், சமரச தீர்வு மையமும் அனுப்பி தீர்வாகாத பட்சத்தில் இருவரும் சம்மதித்தால் சேர்ந்து வாழவும், விருப்பமில்லா விட்டால் பிரியவும் தீர்வு செய்யப்படுகிறது. மற்ற சட்டங்களைப் போல விவாகரத்தை கடுமையாக பின்பற்ற இயலாது. காரணம், இதில் மனம் சம்பந்தப்பட்டதால், உறவு சம்பந்தப்பட்ட பந்தமும் தொடர்கிறது குழந்தைகள் வடிவில். குழந்தைகளின் எதிர்காலம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மனப்பிரிவை மேற்கொள்ள இயலும்.



தம்பதியினரிடையே மனப் பிரிவு ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. மன நோய், பால் வினை நோய், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், முறையற்ற தொடர்பு எனப் பலவகை இருந்தாலும் அண்மைக் காலமாக செல்போன்களின் அசுர வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

செல்போன் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அதில் வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற தகவல் பரிமாற்ற ஊடகங்கள் வழியே எளிதாகப் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவையெல்லாமே முகமறியா மனிதர்களுடன் தொடர்புகொள்ளவும் நட்புகொள்ளவும் வசதி இருக்கிறது. அதில் நிறைய போலி கணக்குகளைத் தொடங்கி நட்பு ஏற்படுத்தி தவறான எண்ணத்துடன் வர வாய்ப்புண்டு. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் தம்பதியர் கவனக்குறைவு ஏற்பட்டால் மூன்றாவது நபர் இடையில் புகுந்து தம்பதியருக்கு குறுக்குச் சுவராய் அமையலாம். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம்.

கணவன், மனைவிக்கு இடையே சமூக ஊடகங்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். போலி முகங்களால் பிரச்சினை வரலாம். தம்பதிகள் இருவரும் பணிபுரிபவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். செல்போனை எடுத்துக்கொண்டு தனித்தனியாக அமர்ந்து கனவுலகில் சஞ்சரிக்கிறார்கள். மனதாலும், உடலாலும் இணையும் வாய்ப்பு மிகமிகக் குறைவே.

‘செல்பி’ போட்டோ எடுத்து, பகிர்ந்து அதை எத்தனை பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்ற சுயமோகம் தம்பதியினரிடையே பிணக்கை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் ஐயம் ஏற்பட்டுவிட்டால் உள்ள பிணைப்பில் தளர்வு ஏற்பட்டு, ஒருவர் மற்றவரை வேவு பார்க்க ஆரம்பிக்க அது முற்றி ‘பாரநோயா’ என்ற மன நோய்க்கு ஆளாகி விவாகரத்து மட்டுமல்ல, தற்கொலை, கொலை செய்யும் அளவுக்குப்போகும். இதற்கான தீர்வை அந்த தம்பதிகளே தான் காணவேண்டும்.

மனக்கசப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவர்களுக்குள்ளாகவே பேசித் தீர்த்துக்கொள்ளலாம். வழக்கு என்பது ஒரு சட்டபூர்வமான விடுவிப்பு. சமூக பந்தங்களிலிருந்தும், சொத்துரிமை போன்ற உரிமைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவே பயன்படும். அதனால் மருந்து நம் கைவசமே உள்ளது. அதை அளவாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை ருசிக்கும்; இல்லையெனில் கசக்கும்.

வாழ்க்கையென்பது நம் கலாசாரப்படி ஒரு வாழும் கலை. அதைச் சிதறாது கட்டுக்கோப்பாக கொண்டு செல்வது தம்பதியினரின் கடமை. குடும்ப வாழ்வில் ஒளிவுமறைவின்றி மனம்விட்டுப் பேசுவதும், ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்வதும் தான் வாழ்க்கை எனத் தெளிந்து குடும்பங்களைப் பராமரிப்போம், நற்செல்வங்களைப் பெற்றெடுப்போம்.

கே.சுப்ரமணியன், வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.

Tags:    

Similar News