தினமும் நடைப்பயிற்சி... கிடைக்கும் அற்புத பலன்கள்
- ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது.
ஆதிகாலத்தில் மனிதர்கள் வயிற்று பசிக்கு உணவைத்தேடி காடுகள், மலைகளில் நடந்து வேட்டையாடி கிடைத்ததை உண்டு வாழ்ந்தார்கள். இயற்கையான வாழ்வில் உடல் உறுதியாக இருந்தது. உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததால் பெரிய அளவில் நோய்களின் தாக்கம் இல்லை.
வண்டி சக்கரம் மற்றும் வேட்டை ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு மனிதன் இலகுவாக உணவை வேட்டையாட தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தான். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்து பிரபஞ்சத்தில் பல லட்சம் மைல் தொலைவில் இருக்கும் கோள்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் அளவுக்கு விரிவாகி இருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்வியல் நடந்து ஓடி உணவு தேடும் தேவை குறைந்து போனதால் நோய்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனை தவிர்க்க, ஒரு நாளில் சில நிமிடங்கள் முதல் மணித்துளி வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் நடைப்பயிற்சி பல்வேறு பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 5 நிமிடங்கள் நடந்தால் மனநிலை மேம்படுகிறது. 10 நிமிடங்கள் நடந்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அளவு குறைந்து மனதில் அமைதி ஏற்படுகிறது. 15 நிமிடங்கள் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது. 30 நிமிடங்கள் நடந்தால் உடலில் தேவை இல்லாத கொழுப்பு கரைந்து வெளியேற தொடங்குகிறது. 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் மனதில் இருக்கும் தேவை இல்லாத குழப்பங்கள் நீங்க, சிந்தனை குறைந்து தெளிவான மனநிலை ஏற்படுகிறது. 60 நிமிடங்கள் நடந்தால் மனதில் உற்சாகம் பிறக்கிறது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதையெல்லாம் விட தினமும் நடந்தால் உடலில் ரத்த சுழற்சி சீராக நடந்து உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வுடன் இயங்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு நன்மை தரும் நடைப்பயிற்சியை நாமும் மேற்கொள்ளலாம்.