உடற்பயிற்சி

வேக நடை-மெதுவான ஓட்டம் சிறந்தது எது?

Published On 2025-11-27 11:15 IST   |   Update On 2025-11-27 11:15:00 IST
  • வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது.
  • மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு.

காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.

இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை செல்வர்.

வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது.

நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை.

கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செல்வார்கள். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.

வேகநடை மூலம் குறைவான கலோரிகளே எரிக்கப்படும். வேக நடை பயிலும்போது கைகளை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி நடப்பது அதிக பலனைத் தரும். வேகநடை முதியோருக்கு ஏற்ற ஓர் சிறந்த கார்டியோ பயிற்சி. இதனை தினமும் செய்வதால் உடற்பருமனானவர்களின் உடற்தசைகளின் அடியில் உள்ள கொழுப்புப் படலம் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். வேக நடை பயில்வது மிக எளிய கார்டியோ உடற்பயிற்சிக்கு சமமானது. வேக நடை பயில்வது மெல்லோட்டம் அளவுக்கு விரைவில் பலனைத் தராது என்றபோதும், உடல் களைப்படையாமல் நீண்டநேரம் செய்ய ஏற்ற உடற்பயிற்சிகளுள் சிறந்தது.

வேகநடை, மெல்லோட்டம் ஆகிய இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ள நிலையில் உங்கள் உடல் நிலைக்கேற்ப நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

Tags:    

Similar News