சமையல்
null

வாழை இலை மீன் சமையல் - "பத்ராணி மச்சி"

Published On 2025-10-09 12:45 IST   |   Update On 2025-10-09 12:58:00 IST
  • இது டயட் இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.
  • ஸ்டீமர் முறையில் சமைக்கும்போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை.

பாரம்பரிய பார்சி உணவு வகைகளில் ஒன்றாகத் திகழும் பத்ராணி மச்சி, அதன் அலாதியான சுவை மற்றும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெரும் புகழ் பெற்று விளங்குகிறது. இது, மீனை எண்ணெயில் பொரித்தோ அல்லது குழம்பாக வைத்தோ சமைக்கப்படும் வழக்கமான முறை கிடையாது. மாறாக, மீன் துண்டுகளில் காரசாரமான பச்சை சட்னியைப் பூசி, அவற்றை வாழை இலையில் நேர்த்தியாகச் சுருட்டி, பின்னர் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான மீன் ரெசிபியை சமையல் கலைஞர் செஃப் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார். 

செய்முறை

* மீன் துண்டுகளை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி ஊற வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்கி, அது லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன், சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, ஆற வைக்கவும்.

* ஆறிய தழைகளுடன், நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பாதியாக அரைக்கவும். பிறகு, துருவி வைத்துள்ள ஒரு கப் தேங்காயையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த மசாலாவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், புளிப்புக்கு ஏற்ற அளவில் லெமன் ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து கையால் நன்கு கிளறவும்.

* இந்தக் காரசாரமான மசாலாவை, ஏற்கனவே உப்பு மற்றும் லெமன் சேர்த்து ஊற வைத்துள்ள மீன் துண்டுகளுடன் நன்கு கலக்கவும்.

* ஒரு சுத்தமான வாழை இலையின் நடுவில் மசாலா தடவிய மீன் துண்டை வைத்து, அதை நான்கு பக்கங்களிலும் மடித்து, ஒரு பார்சல் போல சுற்றவும்.

* சுற்றப்பட்ட வாழை இலை பார்சல்களை ஸ்டீமரில் (ஆவியில் வேக வைக்கும் பாத்திரம்) வைத்து, மீன் நன்கு வேகும் வரை சுமார் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும்.

* வேகவைத்த மீனை ஸ்டீமரில் இருந்து எடுத்து, வாழை இலையை கவனமாகப் பிரித்து, ஒரு பரிமாறும் தட்டில் மாற்றி, உடனடியாகப் பரிமாறவும்.

சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் 

பத்ராணி மச்சியின் சிறப்புகள்

* ஸ்டீமர் முறையில் சமைக்கும் போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை. ஆவியில் வேக வைப்பதால், இது டயட் (உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள்) இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.

* வாழை இலையில் சுற்றி சமைக்கப்படும்போது, இலையின் அலாதியான சுவை மற்றும் மணம் உணவுடன் கலந்து, வேறு எந்த சமையல் முறையிலும் கிடைக்காத ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது.

* இதில் பயன்படுத்தப்படும் பச்சை சட்னிதான் இந்த உணவின் மற்றொரு சிறப்பம்சம். பூண்டு, பச்சை மிளகாயின் காரம், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளின் கூட்டுச் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த மூலிகைகளின் சத்துக்கள் மீனுடன் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.

* இந்த சமையல் முறையை மீன்களில் மட்டுமல்லாமல், பன்னீர் மற்றும் கறித் துண்டுகளிலும் கூட முயற்சி செய்யலாம்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பத்ராணி மச்சி

இந்த அற்புதமான பத்ராணி மச்சி உணவை தோசை, சப்பாத்தி, ரொட்டி அல்லது சாதம் மற்றும் காய்கறி தன்சக் (Vegetable Dhansak) உடன் சேர்த்து சைடிஷ்ஷாக சாப்பிடும் பொழுது, அதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியம் இணைந்த இந்த பார்சி உணவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்!

Tags:    

Similar News