null
ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளை கொண்டிருப்பதற்கான ரகசியம் என்ன?
- ஜப்பானில் ஹரா ஹச்சி பு என்ற உணவுக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
- இந்தியர்களின் ஆயுட்காலம் குறைவாக இருக்க நமது உணவுமுறைதான் காரணம்.
இந்தியாவும், ஜப்பானும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் எளிமையான வாழ்க்கை முறைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், இந்தியர்களைவிட ஜப்பானியர்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். நம்மைவிட ஜப்பானியர் 10 முதல் 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். அதாவது ஜப்பானியரின் ஆயுட்காலம் 84.8 ஆண்டுகள் எனவும், இந்தியர்களின் ஆயுட்காலம் 70.4 ஆண்டுகள் எனவும் வரையறுக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களை நாம் மாத்திரையில்தான் கழிக்கிறோம். இதற்கு காரணம் என்ன என என்றாவது யோசித்துள்ளீர்களா? நம் ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறைய நமது உணவுமுறைதான் முக்கிய காரணம். நமது உணவுமுறைக்கும், ஜப்பானியர்களின் உணவுமுறைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை காண்போம்.
தண்ணீர் - எண்ணெய்
ஜப்பானில் எண்ணெய் பயன்பாட்டை விட தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதாவது நாம் அதிகம் எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகளையே விரும்புகிறோம். அதிகம் எண்ணெயில்தான் சமையலை செய்கிறோம். ஆனால் ஜப்பானில் வேகவைத்தலே அதிகம் பின்பற்றப்படுகிறது. அவர்கள் வறுக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இதனால் வறுக்கும்போது இழக்கப்படும், வைட்டமின் சி, பி, போன்ற ஊட்டச்சத்துக்கள் வேகவைக்கப்படும் உணவுகளால் பாதுகாக்கப்படுகிறது. வேகவைத்து எடுக்கப்படும் உணவுகள் இதய நோய்களை உருவாக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகாமல் தடுக்கின்றன. எண்ணெய் பயன்படுத்தப்படாத உணவுகள், இலகுவாகவும், ஜீரணிக்க எளிதாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும். இந்த சமையல் பாணி சிறந்த குடல் ஆரோக்கியம், நீரேற்றம் மற்றும் நீண்டகால இருதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
ஒமேகா 3 நிறைந்த உணவுமுறை
ஒருகாலத்தில் பாரம்பரிய இந்திய உணவுமுறை என்பது ஆரோக்கியமான கொழுப்புகள், புதிய பொருட்கள், வீட்டில் சமைக்கும் உணவுகளை மையமாக கொண்டிருந்தது. ஆனால் தற்போது, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள்தான் சமையலறைகளை நிரப்பியுள்ளன. ஆனால் ஜப்பானில் தற்போதும் மீன், காய்கறிகள், புளித்த உணவுகள் (இட்லி, தோசை போன்ற உணவுகள்) எண்ணெய் குறைவான உணவுகள்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்து நிறைந்த அணுகுமுறை இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 அமிலங்களை உடலுக்கு வழங்குகிறது. அவை வீக்கத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. இந்த புளித்த உணவுகள், காய்கறிகளை உப்பு தண்ணீரில் ஊறவைத்து ஊறுகாய் போல் செய்து சாப்பிடும் அவர்களின் உணவுமுறைகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. சிறந்த செரிமானத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது.
மீன், கடல்பாசிகள், எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகளையே ஜப்பான் மக்கள் அதிகம் எடுத்துக்கொள்கின்றனர்
பகுதி அளவு (hara hachi bu)
ஜப்பானில் ஹரா ஹச்சி பு என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது 80 சதவீதம் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது பசி அடங்கியவுடன், வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். 'திருப்தி அடைந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்து; அள்ளி அள்ளி போட்டுக் கொள்ளாதே' என்பதுதான் இதன் சுருக்கமான தத்துவம். இந்த கவனமுள்ள அணுகுமுறை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த முறை ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்தியாவிலும் நம் முன்னோர்கள் இந்தமுறையை பின்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமே மேலோங்கியுள்ளது.
உடல் செயல்பாடுகள்
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், குழு பங்கேற்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் ஜப்பானின் அன்றாட வாழ்க்கையில் உடல் செயல்பாடு அதாவது உடற்பயிற்சி பின்னிப்பிணைந்துள்ளது. இது வயதான காலத்தில் வலுவான தசை, எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. ஆனால் இந்தியாவில் சிறுவர்கள்கூட பைக்குகளில்தான் செல்கின்றனர். பலரும் உடல் செயல்பாடுகளுக்கு வேலை கொடுக்க மறக்கின்றனர்.
இரவு உணவு - தூக்கம்
ஜப்பானில் இரவு உணவு குறைவாகவும், சீக்கிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் தூங்குவதற்கு முன்பே செரிமானம் நிகழ்கிறது. இந்தியாவில் இரவுநேரத்தில் இந்த உணவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இல்லை. இரவு உணவு கனமாக இருக்கும். மேலும் தூங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்புதான் சாப்பிடுவோம். சிலரெல்லாம் சாப்பிட்ட உடனேயே படுத்துவிடுவார்கள். இது தூக்கத்தை சீர்குலைத்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.