குழந்தை பராமரிப்பு

டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது ஏன் சவாலாக இருக்கிறது?

Published On 2022-09-12 10:40 IST   |   Update On 2022-09-12 10:40:00 IST
  • பிள்ளை வளர்ப்பு என்பது ஒருபோதும் முழுமையாக முடிவடைவதில்லை.
  • எப்போதும் பிள்ளைகளிடம் ஏதேனும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது.

பள்ளிப் பருவத்தின் மத்தியில் இருக்கும் பிள்ளைகளை வளர்ப்பதுதான் மிகுந்த சிரமமானது, சவாலானது என பெரும்பாலான பெற்றோர் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வொன்று.

பருவமடையும் வயது, அதன் தொடர்ச்சியாக ஏற்படும் மனநிலை மாற்றங்கள், கோபம், தனிமை, குழப்ப உணர்வு என டீன் ஏஜில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் உணர்வுக் கலவையால், பெற்றோருடன் அவர்களுக்கு நிறைய வாக்குவாதங்களும் கருத்து மோதல்களும் வருவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.

12 முதல் 14 வயது வரையுள்ள பிள்ளைகளை வளர்ப்பதுதான் சவாலான காலகட்டம் எனப் பெற்றோர் தெரிவிப்பதாகச் சொல்கிறது இன்னோர் ஆய்வு. பிறந்த குழந்தைகளைவிடவும், பள்ளிச் செல்லும் குழந்தைகளைவிடவும், வளர்ந்த பிள்ளைகளைவிடவும் 12 - 14 வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதுதான் சிரமமாக இருக்கிறதாம். தவழும் குழந்தையின் படுத்தலாகட்டும், தடுமாறும் டீன் ஏஜ் பிள்ளையின் தவிப்பாகட்டும்... பெற்றோருக்கு ஒவ்வொன்றுமே ஒருவித போராட்டம்தான்.

டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும் பிள்ளைகளின் நடவடிக்கையும் அணுகுமுறையும் ஏன் உக்கிரமாக மாறுகிறது என்றால் ரிஸ்க் எடுப்பதில் அவர்களுக்கு அதிகரிக்கும் ஆர்வம் முதல் காரணம்.

ஒரு செயலால் விளைகிற நன்மைகளை மிகப் பெரிதாகவும் அதன் விளைவுகளை சாதாரணமாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.

சக வயதினருடனும் பெற்றோருடனும் பெரியவர்களுடனும் தொடர்பில் இருப்பதையும் அவர்களுக்குச் சமமாகத் தம்மை நினைத்துக்கொள்வதையும் விரும்புகிறார்கள்.

நடுநிலை வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு சிறிய குழந்தைகளை விடவும் ஓரளவு அதிக சுதந்திரம் இருக்கும். ஆனாலும், அவர்களுக்கும் அந்த வயதிலும் பெற்றோர் எல்லைகளை வகுத்து, வலியுறுத்த வேண்டியது அவசியம்.

உங்கள் பிள்ளைகளின் போனை ஆராய்வது, மெசேஜ்களை படிப்பது என்றெல்லாம் எல்லை மீறாதீர்கள். ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் இணைப்பில் இருக்கிறார்கள், எங்கே போகிறார்கள் என்ற எல்லா விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் வேலை, மற்ற கமிட்மென்ட்டுகளைத் தாண்டி, பிள்ளைகளுக்கான நேரத்தை, அது குறைவான நேரமாக இருந்தாலும் முழுமையாக ஒதுக்குங்கள்.

சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபத்துகளை அடிக்கடி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருங்கள். அவற்றில் இருந்து விலகி, பாதுகாப்பாக இருக்கக் கற்றுக்கொடுங்கள்.

பெற்றோர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் அவர்களால் அவர்களின் பிள்ளைகளையும், அதே சந்தோஷத்துடன் வளர்க்க முடியும். அதற்கு அடிப்படை முறையான தகவல் தொடர்பு. ஸ்ட்ரெஸ் இல்லாத பெற்றோரால்தான், பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுக்க முடியும்.

எப்போதும் ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பெற்றோரிடம் எந்தக் குழந்தையும் தானாக முன்வந்து பேச விரும்பாது. தங்களுடைய எண்ணங்கள், விருப்பங்கள், பிரச்னைகளை அப்படிப்பட்ட பெற்றோரிடம் பகிரவும் விரும்ப மாட்டார்கள்.

Tags:    

Similar News