குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் தலையை வேகமாக அசைத்தால் என்ன பாதிப்பு வரும் தெரியுமா?

Published On 2023-04-01 04:50 GMT   |   Update On 2023-04-01 04:50 GMT
  • தாலாட்டுவதற்கோ, தூங்கவைப்பதற்கோ அல்லது சிலர் கோபத்திலோ குழந்தைகளின் தலையைக் குலுக்குவார்கள்.
  • எந்த நிலையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் தலையசைப்பது நல்லதல்ல.

குளித்து முடித்தவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பெரும்பாலானவர்கள் காதுக்குள் சென்றிருக்கும் தண்ணீரை அகற்றத் தலையை வேகமாக அசைத்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள். இப்படிச் செய்வதனால் சிறிய குழந்தைகளின் மூளை பெரிதளவு பாதிப்படையும் என்று அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகம் (Cornell University) மற்றும் வெர்ஜீனியா தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலையை வேகமாக அசைப்பதனால் பெரியவர்களைவிடக் குழந்தைகளே அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்தப் பிரச்னை இன்றும் தொடர்கிறது. தாலாட்டுவதற்கோ, தூங்கவைப்பதற்கோ அல்லது சிலர் கோபத்திலோ குழந்தைகளின் தலையைக் குலுக்குவார்கள்.

அதுபோன்ற நேரத்தில் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். மெல்லிய தலையுடைய குழந்தைகளின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள், லேசாக அசைத்தாலும் பாதிப்புகள் ஏராளம். அப்படி இருக்கும்போது காதுக்குள் சென்ற நீரை வெளியே எடுக்கத் தலையைச் சற்று கடுமையாக அசைக்கும்போது, ரத்தக் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

காதுக்குள் இருக்கும் குழாய் பகுதி வயதானவர்களுக்கு நீண்டு இருப்பதனால், பெரியவர்களுக்கு அவ்வளவாக பாதிப்புகள் இருக்காது. ஆனாலும், எந்த நிலையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் தலையசைப்பது நல்லதல்ல. மேலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், காதுக்குள் சென்ற நீர் தானாகவே ஆவியாகி வெளியேறிவிடும்.

தலையசைத்து நீரை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். காதுக்குள் செல்லும் நீர் உறுத்துவதால் மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறோம் என்பதை உணர்ந்து குழந்தைகளையும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

Tags:    

Similar News