குழந்தை பராமரிப்பு

பச்சிளம் குழந்தைகளை குறிவைத்து தாக்கும் நிமோனியா காய்ச்சல்

Published On 2022-12-23 08:29 IST   |   Update On 2022-12-23 08:29:00 IST
  • இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம்.
  • இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன.

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுள் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிய இடம் உண்டு.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் இது ஏற்படலாம் என்றாலும், பச்சிளம் குழந்தைகளை குறிவைத்து தாக்குவது நிமோனியாவின் தனித்தன்மை.

பலதரப்பட்ட கிருமிகள் காற்றில் கலந்துவந்து நுரையீரலை தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியை உமிழும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சரவர தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்பு புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். இந்த நோயுள்ள குழந்தைக்கு பசி இருக்காது, சாப்பிடாது.

கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால் குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாக காணப்படும்.

இந்த நோயை கவனிக்க தவறினால், இந்த கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளைஉறை போன்றவற்றை பாதித்து, உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்கு தடுப்பூசிகள் உதவுகின்றன. நிமோனியா சில நேரம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்க 50 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News