குழந்தை பராமரிப்பு

குழந்தைகளிடம் எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது...

Update: 2022-08-18 07:15 GMT
  • சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தைக் காண முடியும்.
  • குழந்தைகள் தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலம்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.

சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் பெரிய மாற்றத்தை குழந்தைகளிடம் நாம் காண முடியும். எதையும், என்றும் குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சொல்லிக்கொடுத்துக் கற்றுக்கொள்வதைவிட, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலம்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், உங்கள் குழந்தைகள் என்னென்ன நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை நீங்கள் முதலில் பின்பற்ற வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் குழந்தை நேராகப் பல் துலக்கச் செல்ல வேண்டும் என்றால், பெற்றோர்களும் அதைச் செய்ய வேண்டும். ஆம்... உங்கள் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் நீங்கள் முதலில் இருக்க வேண்டும் அல்லது மாற வேண்டும்.

`இப்ப இருக்குற குழந்தைங்க எல்லாம் பெரியவங்களை மதிக்கிறதே இல்லங்க' என்று பலரும் புலம்புவதைக் கேட்கிறோம். இது எங்கிருந்து தொடங்குகிறது? குழந்தைகளிடம் பெற்றோர் பேசுவதை மட்டுமே அவர்கள் கவனிப்பதில்லை, பெற்றோர் யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கோபமாகப் பேசுவது, துணையிடம் அலட்சியமாகப் பேசுவது, துணையின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசுவது, போனில் கத்திப் பேசுவது, வேலையாட்களிடம் அதிகாரமாகப் பேசுவது... இப்படி அனைத்தையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். உங்கள் வார்த்தைகளைத்தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். எனவே, எப்போதும் நாகரிகமான, பண்பான வார்த்தைகளையே பேசுங்கள்.

முன்பு கூட்டுக் குடும்பங்கள் இருந்தபோது, பலதரப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்த குழந்தைகள், ஒவ்வொருவரிடமும் பல வாழ்க்கை பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள். தாத்தா, பாட்டியின் நீதிக்கதைகள் அவர்களை நல்வழிப்படுத்தின. பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியது அவர்களுக்கு `சோஷியல் கெட்டுகெதர்'ரை இயல்பாகக் கற்றுக்கொடுத்தது. காலையில் சண்டையிட்டுக்கொள்ளும் மாமாவும் அத்தையும் மாலையில் சமாதானமாகும்போது, கோபமும் ஈகோவும் ஈசல்போல குறை ஆயுள்கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

ஏன் நாம் அந்த வாழ்க்கைமுறையை விட்டு வெளியே வந்து, நியூக்ளியர் குடும்பங்களாக மாறினோம்? ``எங்களுக்கு ப்ரைவஸி வேண்டும். நன்றாகச் சம்பாதித்து எங்கள் குடும்பத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும்" என்பார்கள் பலர். ஆனால், குழந்தையின் எதிர்காலத்தைக் காரணம் காட்டி தனிக்குடித்தனம் வந்த எத்தனை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்காக, குழந்தையுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்?

பணத்தை செலவு செய்து கிண்டர் கார்டனில் சேர்த்துவிட்டால், குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும் என்று நினைப்பது தவறு. முன்பு, கூட்டுக்குடும்பத்தில் இருந்த 10 பேர் கற்றுக்கொடுத்த அனுபவக்கல்வியை, இப்போது வழங்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் இருவரிடம் மட்டுமே சேர்கிறது. அதற்கு, அவர்கள் குழந்தையுடன் தங்கள் நேரத்தை செலவு செய்துதானே ஆக வேண்டும்? எனவே, குழந்தைகள் சமர்த்தாக வளர அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு, அம்மா, அப்பா இருவரும் சமம்தான். அம்மா சொன்னால் அப்பா கேட்பார் என்றும், அப்பா சொன்னால் அம்மா கேட்பார் என்றும் பழக்கப்படுத்துவது அவசியம். அம்மா நோ சொன்னால் உடனே அப்பாவை தாஜா செய்து வேண்டியதை சாதித்துக்கொள்வது, அப்பா மறுத்தால் அம்மாவிடம் அனுமதி வாங்குவது என்று அவர்களை பழக்கினால், அது காலம் முழுவதும் தொடரும் பிரச்னையாக மாறிவிடும்.

பெற்றோர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் அதைக் குழந்தை முன் காட்டிக்கொள்ளக் கூடாது. அப்பா திட்டினால், உடனே அம்மா, அப்பாவைத் திட்டிவிட்டு குழந்தையை சமாதானப்படுத்துவது கூடாது. `அப்பாக்கு கோபம் வர்ற மாதிரி நீ ஏன் நடதுக்கிற, அதனாலதான் அப்பா திட்டினாங்க, இனிமே பண்ணாத' என்று குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டிருக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், சின்ன சின்ன தவறுகளைத் தவிர்த்தாலே போதும்... குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தைக் காண முடியும். குழந்தைகளிடம் என்றுமே கட்டாயப்படுத்தி ஒரு விஷயத்தை திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும்படி உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.

Tags:    

Similar News