குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் எந்த வயதில் இருந்து உடற்பயிற்சி செய்யலாம்..?

Published On 2022-09-23 04:20 GMT   |   Update On 2022-09-23 04:20 GMT
  • எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்யக் கூடாது.
  • தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை.

தவழும் பருவத்திலும், நடை பயிலும் பருவத்திலும் குழந்தைகள் இயல்பாகவே, கை-கால்களை அசைத்தபடி, அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டிருப்பார்கள். அதனால் அந்த பருவத்தில், உடற்பயிற்சிகள் தேவைப்படாது. அதற்கான அவசியமும் இருக்காது. ஆனால் 5 வயது தொடங்கி 17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம்.

பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும்கூட, ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

இவர்களுக்குத் தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 முறை உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது.

உடற்பயிற்சிக்கு என சிறப்பு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. தொலைக்காட்சி, செல்பேசி, கணினி, வீடியோ விளையாட்டுக்கள் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைப்பதினால், விளையாடுவதற்கான நேரம் கிடைத்துவிடும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், ஓடுதல், குதித்தல், இசைக்கு ஏற்ப ஆடுதல், பூப்பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் செய்தாலே போதும்.

எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல்நிலை, உடல்தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடலிலும், மனதிலும் பாதிப்பு உள்ள குழந்தைகளை உரிய சிகிச்சையுடன், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் உடற்பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதிக்கக் கூடாது. முறையான உணவு, முறையான உடற்பயிற்சி, முறையான உறக்கம் இந்த மூன்றும் சரிவர நிறைந்திருக்கும் குழந்தைகளின் வாழ்க்கை நிச்சயம் ஒளிவீசும்.

Tags:    

Similar News