குழந்தை பராமரிப்பு

குழந்தைகளின் திறனை ஊக்கப்படுத்துங்கள்...

Published On 2022-08-15 04:32 GMT   |   Update On 2022-08-15 04:32 GMT
  • வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பெரியவர்கள் குழந்தைகளோடு விளையாட வேண்டும்
  • குழந்தைகள் எப்போதுமே மனரீதியாக உற்சாகமாக இருக்க வேண்டியவர்கள்.

குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமான மனநிலையும், சிறந்த செயல்பாடுகளையும் உடையவர்கள். ஆனால் அந்த உணர்வுகள் அடிக்கடி தடுத்தலுக்கும், கட்டுப்படுத்துத லுக்கும் உட்படுகிறது. இதனை தாண்டித் தான் குழந்தைகள் இயல்பை தொலைக்காமல் தங்களை காத்து கொள்ள வேண்டி இருக்கிறது.

எது சரி, எது தவறு என்ற வரையறைகளை மிகச் சரியாக கடைபிடிப்பதுபோல் பெரியவர்கள் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அது பல நேரங்களில் குழந்தைகளிடம் எதிர்விளைவை ஏற்படுத்தி விடக்கூடும். யாருமற்ற இடத்தில் குழந்தைகள் தனியாகவே விளையாடுவார்கள். அப்போது தானாகவே விதிகளை உருவாக்கி கொண்டு தனியாக பேசிக் கொண்டு உற்சாகமாக விளையாடும். அந்த விளையாட்டில் ஒரு அதீத தன்மை இருக்கும். அதுவே குழந்தைகள் தன்னை மறந்த உயர்நிலை செயல்பாடாக இருக்கும். அதில் குழந்தைகளின் ஆற்றல், திறன், கற்பனை, மனநிலை ஆகியவற்றை காணமுடியும்.

இது மட்டுமின்றி குழந்தைகள் பிற குழந்தைகளுடன் விளையாடும்போதும் தங்களின் உண்மையான இயல்புகளை, ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள். அதை கண்டு கொள்ள பெற்றோர்கள் நேரம் ஒதுக்கவேண்டும். அந்த திறமைகளை வளர்த்தெடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தனித்திறமைகள் தான் ஒருவனை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்கிறது. ஆனால் அதை மழுங்கடிக்கும் வேலைகள் குழந்தைகளிடம் நடந்து விடக்கூடாது.

படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இது பல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது. கல்வியில் ஆர்வம் காட்டாத குழந்தைகளை கண்டிக்கிறோம் என்று அவர்களின் திறன்களை முடக்கியோ, ஊனப்படுத்தியோ விடக் கூடாது. மேலும் அவர்களுக்கு இயல்பாக வழங்கும் சலுகைகளை கூட தடுத்து விடக்கூடாது.

குழந்தைகள் எப்போதுமே மனரீதியாக உற்சாகமாக இருக்க வேண்டியவர்கள். சுமையோ, பாரமோ, மனஉளைச்சலோ அவர்களின் இயல்பை பாதிக்கச் செய்துவிடும். புதிய எண்ணங்களையோ, செயல்களையோ குழந்தைகள் வெளிப்படுத்துவது அடிக்கடி நடக்கும். அதை ஊக்குவிக்கவும், பொருள் பொதிந்த தன்மைகளையும் எடுத்துக் கூற வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பெரியவர்கள் குழந்தைகளோடு விளையாட வேண்டும், தோற்றுப்போக வேண்டும். குழந்தைகளை வெற்றி பெறச்செய்ய வேண்டும். பரிசு கொடுக்க வேண்டும். தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். பெரியவர்களை மதிக்கவும், சிறியவர்களோடு இணங்கியும் செயல்பட வேண்டியதன் நட்பை சொல்லி கொடுக்கவேண்டும்.

நண்பர்களை தேர்வு செய்வதில் குழந்தைகளின் மனநிலை சுவாரசியமானது. அதில் தடையோ, மறுப்போ தெரிவிக்க கூடாது. பேதமற்ற மனநிலை இயல்பில் வளர்க்கப்படாமல் வேறு வகையில் சாத்தியமில்லை. எனவே எல்லா நிலைகளிலும் குழந்தைள் தங்களின் இயல்பான எண்ணத்தோடு சுதந்திரமாக சிந்தித்து செயல்பட விடவேண்டும். அவர்களுக்கு காவல் இருப்பது என்பது எப்போதும் பலன் தராது. அதே நேரத்தில் உரிய வழிகாட்டுதல்களையும், கண்காணிப்பையும் எந்த காலத்திலும் விட்டு விடக்கூடாது. அந்த உரிமை என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஒத்த திசையில் பயணிப்பதாக இருக்க வேண்டும். எதிர்மறையாக இருந்துவிடக்கூடாது என்பது முக்கியம்.

நெருக்கடியை, சவால்களை தனியாக எதிர்கொள்ள விடுங்கள். தோற்றாலும் மீண்டு வர நேரம் கொடுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தைரியம் கொடுங்கள், தன்னம்பிக்கையோடு இருக்க பயிற்சி அளியுங்கள். தோல்வி என்பதை வெற்றியாக மாற்ற சில அடி தூரம் தான் பயணிக்க வேண்டும். அதற்கான உறுதியை மட்டும் விட்டு விடக்கூடாது. குழந்தைகள் எதிலும் வெற்றி வாகை சூட தகுதி வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Tags:    

Similar News