குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு பாரம்பரியத்தில் நாட்டம் ஏற்படுத்த வேண்டும்

Published On 2022-12-19 09:50 IST   |   Update On 2022-12-19 09:50:00 IST
  • காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம்.
  • விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது.

பாரம்பரியம் என்பது தொன்றுதொட்டு வருவது ஆகும். அதனை நாம் காக்க வேண்டும். பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் பாரம்பரியத்தன்மை கொண்டதாக கருதப்படுகின்றன. அந்த பாரம்பரிய நிகழ்வு நடத்தப்படுவதன் உண்மையான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரியாத நிலையிலும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். இந்த நிலையில் பாரம்பரிய நிகழ்வின் உண்மையான காரணம் அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

அப்படி தெரிந்து கொண்டு பாரம்பரிய நிகழ்வை கொண்டாடுவது தான் சரியானதாக இருக்கும். அதோடு எதிர்கால தலைமுறைக்கும் சரியான வழியை காட்டியதாக இருக்கும். இதை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு காலமாற்றம் என்பது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு வருகிறது. அதில் பல நேரங்களில் நாம் பலியாகி விடுகிறோம். எந்த காரணமும் இல்லாமல் நாகரிகம் என்ற பெயரில் பல நல்லவனவற்றை நாம் தொலைத்துவிட்டோம். அந்த வகையில் நாம் முதலில் தொலைத்தது நம்முடைய பாரம்பரிய உணவுகள் தான்.

இதுதான் அனைத்து சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமாகி விட்டது. பாரம்பரிய உணவை விட்டதால் பல்வேறு நோய்களுக்கும், உடல் ஒவ்வாமைக்கும் ஆளாகி விட்டோம். இதனால் அந்த உணவை இழந்ததோடு, தற்போது வாங்க முடியாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது.

அதோடு பாரம்பரிய தொழில்களில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுவித்து கொண்டோம். இதனால் இன்று சுயதொழில் என்பதே வெகுவாக குறைந்து விட்டது. பெரும்பாலானோர் ஏதாவது ஒரு வேலைக்கு கூலிக்கு செல்பவர்களாகவே இருக்கிறோம். கைத்தொழில்கள் அழிந்து வருகின்றன. இதற்கு காரணம் அந்த கலைகளின் நுட்பங்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தராததும், அதுகுறித்து முறையாக பதிவு செய்யாததும் காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் பாரம்பரிய ஆடைகளை விட்டு விட்டோம். அதோடு அந்த வகை ஆடை அணிபவர்களை மதிப்பு குறைந்தவர்களாக நாமே கருத தொடங்கிவிட்டோம். ஆனால் அதே ஆடைகளை பிறர் அணிந்தால் அவர்களை உயர்வாக மதிப்பிடும் முரண்பாடான மனநிலையும் நம்மிடையே இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

காலம்காலமாக விளையாடி வந்த விளையாட்டுகளை மறந்து வருகிறோம். காரணம் அவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர மறுத்துவிட்டோம். இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெற்று வந்த மகிழ்ச்சியை கொடுக்க தவறிவிட்டோம். இதனால் அவர்கள் செல்போனில் தங்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.

சில சாதாரண பிரச்சினைகளை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். விளையாட்டு உலகம் அவர்களுக்கு நிழல் யுத்தமாக மாறிவிட்டது. தற்போது மேலும் ஒருபடி மேலே போய் வன்முறை மனநிலை நிறைந்த விளையாட்டாக மாறிவிட்டது. இளம் வயதிலேயே தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது.

வீட்டில் பெரியவர்களுக்கு உரிய இடம் தர மறுத்து வருகிறோம். இதனால் வீட்டில் பழங்கால பொருட்களும் குப்பைக்கு போய் விட்டன. பாரம்பரிய சடங்குகளை மறந்து வருகிறோம். பெரியவர்களின் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டதன் காரணமாக பல்வேறு சுமைகளுக்கு ஆளாகி, அதை சுமக்கவும் தெரியாமல் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறோம். எனவே பழையது, முடிந்துபோனது, வரவேற்பு இல்லாதது என்று ஒதுக்கி விடாமல் குழந்தைகளுக்கு பாரம்பரிய கலாசாரத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாமும் கற்று கொள்ள வேண்டும்.

இந்தியா என்பது பாரம்பரிய, பண்பாட்டுக் கூறுகளால் தான் வலுவாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதுவே தனி மனிதர்களை மட்டுமல்ல இந்திய பொருளாதாரத்தையும் யாரும் வீழ்த்தி விடாமல் காத்து வருகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

Tags:    

Similar News