குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கான படகு நூலகம்

Published On 2022-07-16 03:36 GMT   |   Update On 2022-07-16 03:36 GMT
  • படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகளை கவரும் விதத்தில் இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள்.

புத்தகங்களை கைகளில் புரட்டி படிக்க வேண்டிய வயதில் ஸ்மார்ட்போன்களில் அத்தனையையும் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால் புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இவை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக ஒடிசாவில் படகு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பிதர்கனிகா தேசிய வன பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில்1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குழந்தைகளை புத்தகங்களை படிக்க வைப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த படகு நூலகம் நிர்வகிக்கப்படுகிறது. இதுகுறித்து பிதர்கனிகா கோட்ட வன அலுவலர் ஜே.டி. பதி கூறுகையில், ''குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இயற்கையுடன் ஒன்றிணைப்பதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நூலகத்தின் நோக்கமாகும்" என்கிறார்.

சிதிலமடைந்த நிலையில் இருந்த படகை புதுப்பித்து, குழந்தைகளை கவரும் விதத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்து இந்த நூலக படகை அழகுபடுத்தி இருக்கிறார்கள். படகிற்குள் குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக விசாலமான அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சூழ்ந்து 30-க்கும் மேற்பட்ட அலமாரிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குள் இருக்கும் புத்தகங்களை குழந்தைகள் எளிதாக எடுத்து படிக்கும் வண்ணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படகு நூலகத்திற்கு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தருகிறார்கள். நாட்டுப்புறக் கதைகள், சுயசரிதைகள், சிறுகதைகள், கலைக்களஞ்சியங்கள், அட்லஸ், அறிவியல் புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு, சூழலியல், சதுப்புநிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அரசாங்க வெளியீடுகள் மற்றும் பிரசுரங்களும் இந்த படகு நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News