குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை எவ்வாறு வளர்ப்பது?

Published On 2022-10-01 03:24 GMT   |   Update On 2022-10-01 03:24 GMT
  • சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும்.
  • பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும்.

மதித்தல் என்றால் என்ன? ஒரு மனிதருக்கோ ஒரு பொருளுக்கோ மதிப்பு கொடுப்பதை மதித்தல் என்கிறோம். நாம் ஒருவரை மதிக்கும் போது அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று. மகிழ்ச்சி மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது மதித்தல் என்ற நற்பண்பு ஆகும். நாம் மற்றவரை மதிக்கும் போது நாமும் மதிக்கப் படுகின்றோம். யார் ஒருவர் மற்றவர்களை மதிக்கின்றார்களோ அவர்கள் ஒழுக்கமானவர்கள், பணிவானவர்கள் மற்றும் பிறரை கௌரவ படுத்துபவர். அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். இப்படி பட்டவர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுகின்றனர்.

மதித்தல் என்ற நற்பண்பின் வகைகள் மற்றும் அப்பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிகள் பற்றி காண்போம்.

தன்னை மதித்தல் அல்லது சுயமரியாதை

நம்மை நாமே மதித்துக் கொள்வது மற்றும் மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று வரையறுப்பது சுய மரியாதை ஆகும். சுயமரியாதை தான் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அடிப்படையாக இருக்கும். சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும். புகழ் மற்றும் கௌரவத்தை கொடுக்கும். சுயமரியாதை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நம் ஒப்புதல் இல்லாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். நாம் அதன் படி செயல் பட வேண்டி வரும்; நம் இயற்கைக்கு மாறாக செயல் பட நேரிடும்.

தனி நபர் மற்றும் சமுதாயத்திற்கான மதிப்பு

மற்றவர்களை மதிப்பது என்பது மற்றவர் மீது அன்பு செலுத்துவது, அக்கறை மற்றும் மரியாதை கொடுப்பதாகும். மற்றவர்களை மதிப்பது என்பது அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதாகும். ஒரு தனி நபரை நீங்கள் மதிக்கும் போது உங்கள் மனம் எல்லோரையும் மதிக்கத் துவங்கிவிடும். குழந்தைகள் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்கிறார்கள்; மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கிறார்கள்; எனவே சமுதாயத்தில் சிறியவர்களுக்கு பெரியவர்களை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மேலும் சமுதாயத்தின் விதி முறைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

பலகீனமானவர்களை மதித்தல்

அனைவரையும் மதிப்பது தான் கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தின் அடையாளமாகும். குழந்தைகள், முதியவர்கள், உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள் போன்ற பலகீனமான மக்கள் உட்பட அனைவரையும் மதிப்பது அந்த சமுதாயத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது.

இயற்கையை மதிப்பது

இயற்கையை மதிப்பது என்பது நம்மை சுற்றி உள்ள இயற்கை வளங்களை மதிப்பதாகும். மக்கள் இயற்கை வளங்களை நீண்ட காலம் பயனளிக்கும் வகையில் கவனமாக கையாள வேண்டும்.அவை இந்த மொத்த சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும் .

மதித்தல் பண்பின் இன்றியமையாமை மற்றும் நன்மைகள்

அனைவருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெரியவர்களை மதிப்பதை மட்டும் தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். சமுதாயத் தகுதி வயது ஆகியவற்றை பார்க்காமல் அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருவது இல்லை. அனைவருடன் சமமாக பழக சிறு வயது முதல் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் மற்றவர்களோடு பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது

மற்றவரை மதிக்கும் நற்பண்பை வளர்த்துக் கொண்டால் அன்றாடும் மற்றவர்களோடு பழகவைத்து மகிழ்ச்சியாக இருக்கும். மனநிறைவோடு வாழலாம். மற்றவர்களை மதிக்கும்போது அது மன நிறைவை ஏற்படுத்துவதோடு நம்முடைய குறைகளை சொல்லி அதற்கான தீர்வுகளை பெறுவதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், ஒரு இனிமையான சூழல் உருவாகுவதற்கும், நம்முடைய வாழ்க்கை பாதை சரியான திசையில் செல்வதற்கும், வழி வகிக்கிறது. இப்படி பல நன்மைகளை உருவாக்கும் மதித்தல் என்ற நற்பண்பை நாம் வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது என்பது தெரிய வருகிறது.

இந்த மதித்தல் என்ற நற்பண்பை வளர்ப்பது எப்படி?

குழந்தைகள் தவறு செய்யும் போது அல்லது இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும் போது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க கூடாது; தடுக்கவும் கூடாது. அதற்கு மாறாக அவர்களிடம் இப்படி கேட்க வேண்டும் "இதே காரியத்தை உனக்கு யாராவது செய்தால் நீ எப்படி உணர்வாய்"? "மற்றவர்கள் இடத்தில் இருந்தும் யோசிக்க கற்றுக்கொள்". இந்த அணுகுமுறை குழந்தைகளே தாங்கள் செய்வதை சரியா தவறா என்பதை யோசிக்கும் அறிவை வளர்க்கும். இதனால் அவர்களே தங்களை மதித்துக் கொள்ளும் உணர்வை உண்டாக்கும். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

மதித்தல் என்ற நற்பண்பை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கு நன்றி சொல்வது, நல்ல செயல் செய்யும் போது பாராட்டுவது, அவர்களுக்கு பெற்றோர்கள் சிறு தவறு இழைத்து விட்டால் மன்னிப்பு கேட்பது இப்படி குழந்தைகளோடு பழகும் பொது இயல்பாக அவர்களும் மதித்தல் என்ற நற்பண்பை கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களோடு இனிமையாக பழகும் கலையை வளர்த்துக் கொள்வார்கள். மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு குழந்தைகளின் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை சிறு வயது முதலே வளர்க்கத் தொடங்குங்கள். அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.

Tags:    

Similar News