லைஃப்ஸ்டைல்

பொதுத்தேர்வு: மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

Published On 2019-02-27 03:30 GMT   |   Update On 2019-02-27 03:30 GMT
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

தேர்வர்கள் தமது முகப்புச் சீட்டிலுள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். தங்களது மேஜை, நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டுச்சீட்டுகளும் இல்லை என்பதை தேர்வு தொடங்கும் முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாளின் எந்தவொரு பகுதியிலும் தேர்வு எண்ணையோ, பெயரையோ கண்டிப்பாக எழுதுதல் கூடாது. தேர்வு எழுதும்போது விடைகளை உத்தேசமாக போட்டு பார்ப்பதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் வண்ண பென்சில்களை பயன்படுத்தி எழுதுதலோ, அடிக்கோடிடுதலோ கூடாது. விடைத்தாள் புத்தகத்தில் உள்ள பக்கங்களை எக்காரணம் கொண்டும் கிழிக்கவோ, தனியாக பிரித்து எடுத்துச்செல்வதோ கூடாது. கூடுதல் விடைத்தாட்கள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே அதுகுறித்து அறைக்கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஒருசில விடைகளைக் கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில், ‘மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்ற குறிப்புரையை பேனாவினால் எழுத வேண்டும். தேர்வர்கள் எக்காரணங்கொண்டும் தாம் எழுதிய விடைகளை அடித்தல் கூடாது. அது ஒழுங்கீனச்செயல் என கருதப்படும். இதனை மேற்கொண்டால் தேர்வு முடிவு நிறுத்தம் செய்யப்படுவதுடன் அடுத்து வரும் இரு பருவங்களுக்கும் தேர்வினை எழுத முடியாது.

நேரத்தை மட்டும் காட்டக்கூடிய சாதாரண கைக்கெடிகாரத்தை மட்டுமே அணிந்து வரலாம். பறக்கும்படை உறுப்பினர்கள் பணியின்போது தேர்வர்கள் அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. அவர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் (கட்டாயமாக) சோதித்தல் அவசியம் இல்லை. தவறுகளை கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமை ஆற்ற வேண்டும். 
Tags:    

Similar News