வழிபாடு

ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு: நாளை மண்டல பூஜை

Published On 2023-12-26 06:45 GMT   |   Update On 2023-12-26 06:45 GMT
  • ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
  • நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவனந்தபுரம்:

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.

இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.

அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.

மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News