வழிபாடு

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் திருமலைக்கு வந்தன

Published On 2023-09-22 06:31 GMT   |   Update On 2023-09-22 06:31 GMT
  • இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.
  • வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

திருப்பதி:

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்தன. அந்த மாலைகளுக்கு பெரிய ஜீயர் மடத்தில் பூஜைகள் செய்யப்பட்டது. இன்று மூலவர், உற்சவருக்கு அணிவிக்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கருடசேவை நடக்கிறது.

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் வெங்கடாசலபதிக்கும் அணிவிப்பதற்காக தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கோதாதேவி 'சூடிக்கொடுத்த மாலைகள்' மற்றும் கிளிகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் நேற்று திருமலைக்கு வந்தன.

முதலில் திருமலை பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் உள்ள பெரியஜீயர் மடத்துக்கு ஆண்டாள் சூடிய மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதன் பிறகு பெரிய ஜீயர் மடத்தில் இருந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தமிழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கோதாதேவியின் மாலைகளை ஏழுமலையான் கோவில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மூலவர் சன்னதிக்குள் கொண்டு சென்றனர்.

அப்போது திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருமலைக்கு கோதாதேவி மாலைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோதாதேவி மாலைகள் திருமலைக்கு வந்தன. கருடசேவையின்போது புனித மாலைகள் மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவித்து அலங்கரிக்கப்படும், என்றார். மாலைகள் ஊர்வலத்தில் டெல்லி தகவல் மைய உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் வேமிரெட்டிபிரசாந்தி, திருமலை கோவில் துணை அதிகாரி லோகநாதம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அதிகாரிகள் ரங்கராஜன், சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News