கிரிக்கெட்

டி20 போட்டியில் முதல் சதம்: ரெய்னா - விராட் கோலியின் சாதனையை தகர்த்த சுப்மன் கில்

Published On 2023-02-02 05:19 GMT   |   Update On 2023-02-02 05:19 GMT
  • 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) சுப்மன் கில் சதம் அடித்து உள்ளார்.
  • விராட் கோலியின் அதிகபட்ச ரன்னையும் (ஒரு இன்னிங்ஸ்) சுப்மன்கில் முறியடித்தார்.

அகமதாபாத்:

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது.

தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 126 ரன்னும் (12 பவுண்டரி, 7 சிக்சர்), ராகுல் திரிபாதி 22 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி, மிச்சேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து 12.1 ஓவரில் 66 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 168 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவின் சிறந்த வெற்றி யாகும்.

டேரியல் மிச்சேல் அதிபட்சமாக 25 பந்தில் 35 ரன் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஹர்த்திக் பாண்ட்யா 4 விக்கெட்டும், அர்தீப்சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன்னிலும், லக்னோவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது.

ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்து இருந்தது.

சதம் அடித்ததன் மூலம் சுப்மன்கில் புதிய சாதனை புரிந்தார். 20 ஓவர் போட்டியில் இளம் வயதில் செஞ்சூரி அடித்து அவர் இந்த சாதனையை புரிந்தார். 23 வயது 146 நாட்களில் சுப்மன்கில் சாதனை புரிந்தார். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா 23 வயது 156 நாட்களில் சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. அவரின் சாதனையை சுப்மன்கில் முறியடித்தார்.

3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அவர் சதம் அடித்து உள்ளார். இதன் மூலம் ரெய்னா, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் வரிசையில் சுப்மன்கில் இணைந்தார். மேலும் விராட் கோலியின் அதிகபட்ச ரன்னையும் (ஒரு இன்னிங்ஸ்) சுப்மன்கில் முறியடித்தார். 

Tags:    

Similar News