கிரிக்கெட் (Cricket)

மீண்டும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகும் ரோகித் சர்மா? முன்னாள் வீரர் தகவல்

Published On 2024-04-03 22:47 IST   |   Update On 2024-04-03 22:47:00 IST
  • ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தில் இருக்கிறார்.
  • ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள்.

மும்பை:

ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

இது குறித்து மனோஜ் திவாரி கூறியதாவது:-

ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விஷயங்கள் மூலம் தெரிகிறது. அவர் ரசிகர்களின் எதிர்ப்பால் அழுத்தத்தை உணர்கிறார். நான் பெரிய விஷயம் ஒன்றை சொல்லப் போகிறேன். இந்த ஆறு நாள் இடைவெளியில் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோகித் சர்மாவை கேப்டனாக்க வாய்ப்பு உள்ளது.

இந்த மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள். அவர்கள் தான் ரோகித் சர்மா கேப்டன் பதவியை பறித்து இந்த சிக்கலை துவங்கி வைத்தார்கள்.

உங்களுக்கு ஐந்து கோப்பை வென்று கொடுத்த கேப்டனை மாற்றினீர்கள். தற்போது புதிய கேப்டன் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றுத் தரவில்லை. அவரது கேப்டன்சியும் சரியில்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன.

இவ்வாறு திவாரி கூறினார்.

Tags:    

Similar News