டேரில் மிட்செல் அபார சதம்: இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
- முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.
- நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுல் (112 நாட்அவுட்) சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது.
பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவன் கான்வே (16), ஹென்றி நிக்கோலஸ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு வில் யங் உடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மிட்செல் 52 பந்தில் அரைசதமும், வில் யங் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.
இருவரும் சதத்தை நோக்கி சென்றனர். வில் யங் 98 பந்தில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரில் மிட்செல் உடன் கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். டேரில் மிட்செல் அபாரமாக விளையாடி 96 பந்தில் சதம் விளாசினார்.
இருவரும் நிலைத்து விளையாட நியூசிலாந்து அணி வெற்றி நோக்கி பயணித்தது. இருவரும் ஆட்டமிழக்காமலும், அதிரடியை நிறுத்தாமலும் விளையாடியதால் நியூசிலாந்து 47.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் 131 ரன்களுடனும், கிளென் மிட்செல் 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 18-ந்தேதி இந்தூரில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.