கிரிக்கெட்

ஒரு ஓவரின் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார்: உலக சாதனையில் இணைந்த ஹாரி ப்ரூக்

Update: 2022-12-01 15:08 GMT
  • முதல் நாளான இன்று 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து அசத்தினர்
  • ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

ராவல்பிண்டி:

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட், ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகிய நான்கு வீரர்கள் சதமடித்து அசத்தினர்.

அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சவுத் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் பதிவு செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடித்த வீரர்கள்:

1982: சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு

2004: கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு

2006: ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு

2007: சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு

2022: ஹாரி ப்ரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு.

Tags:    

Similar News