கிரிக்கெட்

ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட்: சென்னையில் அரையிறுதி போட்டி நடத்த பிசிசிஐ விருப்பம்

Published On 2023-06-13 07:31 GMT   |   Update On 2023-06-13 07:31 GMT
  • 2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை.
  • 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை.

சென்னை:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தது. இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்தியது.

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறுகிறது. 13-வது உலக கோப்பை போட்டியான இதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே 10 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த வரைவு அட்டவணையை ஐ.சி.சி.க்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அனுப்பியுள்ளது.

அதன்படி அக்டோபர் 5-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ந்தேதி நடைபெறும் என்று உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை அகமதாபாத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி மோதும் 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது. ஆப்கானிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதியும், தென்ஆப்பிரிக்காவுடன் அக்டோபர் 27-ந்தேதியும் அந்த அணி மோதுகிறது.

உலக கோப்பை இறுதி ஆட்டம் நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடக்கிறது. ஆனால் இதற்கான இடங்கள் இன்னும் முடிவாகவில்லை.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு அரைஇறுதி ஆட்டம் சென்னையில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 15-ந்தேதி முதல் அரை இறுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த உலக கோப்பையின் ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

2-வது அரைஇறுதி ஆட்டத்தை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News