search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடி"

    • கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் என்பவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்-ஐ ஒவ்வொன்றாக அவர் முடித்துள்ளார்.

    இதன் இறுதியில் அவர் வங்கி கணக்கில் இருந்து ₹2.50 லட்சம் வரை பணத்தை இழந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .

    இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

    • பல கோடி ரூபாய் லோன் வாங்கித் தருவதாக கூறி மோசடி.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையத்து அருகே உள்ள பாலாமடையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). இவர் கல்குவாரி நடத்தி வருகிறார்.

    இவருக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்க முடிவு செய்துள்ளார்.

    இதனை அறிந்த கேரள மாநிலம் கொல்லம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிபின் (35) உள்பட 4 பேர் பாலசுப்பிரமணியனை சந்தித்துள்ளனர்.

    பின்னர் வங்கி அதிகாரியை தங்களுக்கு தெரியும் என்றும், அவர்களுக்கு ரூ.16 லட்சம் கமிஷன் கொடுத்தால் பல கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் ரூ.16 லட்சம் பணத்தை சிபின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சிபின் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதைத்தொடர்ந்து சிபினை சந்திக்க முயன்ற போது அவர் தலை மறைவாகிவிட்டார்.

    இதுகுறித்து பால சுப்பிரமணியன் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்படி, துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், பிச்சையா ஆகியோர் தலைமறைவான சிபினை தேடி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் கொல்லம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நெல்லை நீதிமன்றத்தில் சிபின் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது40). வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரை கும்பகோணம் சோழபுரத்தை சேர்ந்த முகமது சுகைல் (32) என்பவர், தான் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

    இந்த தொழிலில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு பைகளுக்கு ரூ.22 லட்சம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

    இதனை நம்பிய முகமது சுகைல் முதல் கட்டமாக ரூ.50 லட்சமும், அடுத்த கட்டமாக ரூ. 25 லட்சமும் கொடுத்துள்ளார். இதில் அவர் கொடுத்த தொகைக்கு வட்டியாக ரூ.19 லட்சத்தை முகமது சுகைல் வழங்கி உள்ளார்.

    அதிக வட்டி தருவதாக கூறி அதில் இருந்தும் ரூ.10 லட்சத்தை கூடுதல் முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

    நாளடைவில் முகமது சுகைல் வட்டியும் கொடுக்க வில்லை. பணமும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. அப்போது, ரூ.5 கோடிக்கு ஏலச்சீட்டு போட்டுள்ளதாகவும். அதற்கு தவணை தொகை செலுத்த ரூ.50 லட்சம் கிடைத்தால் அந்த சீட்டை எடுத்து, கடன்களை அடைத்துவிடுவதாக முகமது சுகைல் கூறியுள்ளார். இதையும் நம்பி ரூ.௫௦ லட்சத்தை முகமது பயாஸ் கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு கொடுத்த பணம் ரூ.1.35 கோடியை திரும்பிக்கேட்ட முகமது பயாஸுக்கு, முகமது சுகைல் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்நிலையில் எஸ்பி அலுவல கத்தில் முகமது பயாஸ் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த போது, தற்காலிகமாக ரூ.10 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக எஸ்பி அலுவலகத்தில் முகமது பயாஸ் மீண்டும் ஒரு புகார் அளித்தார்.

    இந்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முகமது சுகைலையை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வாங்கிய தொகைகளை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.

    இது தொடர்பாக அவரிடம் தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
    • மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி , லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் 2018-19-ம் ஆண்டுகளில் கர்ப்பிணிகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அதேபோல் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பிட்ட இரு தனியார் ஏஜென்ஸிகள் இந்த தரமற்ற மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க (என்.ஆர்.எச்.எம்.) மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்ஆர்எச்எம் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

    மருந்தாளுநர் நடராஜனின் மனைவி மற்றும் நண்பரின் ஏஜென்ஸிகள் மூலமாக இந்த மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, மருந்தாளுநர் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதன்பேரில் மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்.ஆர்.எச்.எம் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மருந்தாளுநர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவை அருகேயுள்ள மாநில சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மருந்து, மாத்திரை கொள்முதல் செய்யும் பிரிவில் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் என்.ஆர்.எச்.எம். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மருந்துகளையும் அங்கிருந்து பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

    இதையடுத்து மருந்து கொள்முதல் வழக்கு தொடர்பாக இந்திய தணிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இந்நிலையில் மத்திய தணிக்கை குழுவினர் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள என்.ஆர்.எச்.எம் பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் கடந்த 4 நாட்களாக விசாணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய தணிக்கை குழு விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. மத்திய தணிக்கை குழுவினரின் அதிரடி விசாரணையால் புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

    • பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
    • வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

    நெல்லை:

    சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி(40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து, பானுமதி கடந்த 29-ந்தேதி ஆசை வார்த்தை கூறி நித்யானந்தமை நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பானுமதி வீட்டுக்கு சென்ற அவரை அங்கிருந்த மேலும் 4 பேர் கும்பல் சேர்ந்து கடத்தி சென்று நகை, ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறித்தது.

    இதுகுறித்து நித்யானந்தம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தியிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் பானுமதி, அவரது கூட்டாளிகளான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பார்த்தசாரதி(46), வெள்ளத்துரை(42), ரஞ்சித்(42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை(40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் இதேபோல் பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பான தகவல்கள் வருமாறு:-

    பானுமதிக்கு ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கல்லூரி படிப்பு முடித்த ஒரு மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பானுமதியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

    இந்நிலையில் பானுமதிக்கு தனது பள்ளி தோழனான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெள்ளத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பானுமதி பட்டப்படிப்பு முடித்தவர் என்பதால் முகநூலை பயன்படுத்தி அதில் தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களை தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார்.

    அவர்களிடம் மாதக்கணக்கில் பழகி நம்ப வைத்து, ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அவர் தொழிலதிபர்களை வரவழைத்து படுக்கை அறைக்கு அழைத்து சென்று கதவுகளை பூட்டிக்கொள்வார். அடுத்த 5 நிமிடங்களில் வெள்ளத்துரை தனது கூட்டாளிகள் 3 பேருடன் அங்கு வந்து கதவை தட்டுவார்.

    பின்னர் எனது மனைவியை கற்பழிக்க முயன்றுள்ளாய் என கூறி போலீசில் புகார் அளித்து உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று கூறி அந்த தொழில் அதிபர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் உடைமைகளை பறித்து வந்துள்ளனர்.

    தங்களின் பிடியில் சிக்கும் தொழிலதிபர்களை பொன்னாக்குடி பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் தங்களது பெயரில் உள்ள ஒரு தனி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர்.

    சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த கும்பல் சென்னை, கோவை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களை குறிவைத்து ஆசைவார்த்தை பேசி நெல்லைக்கு வரவழைத்து அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இவர்களது வலையில், 40 வயதில் தொடங்கி 65 வயது வரையிலான தொழிலதிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சபலத்தால் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இவ்வாறாக அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது.

    வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும். அதற்கு பணத்தோடு போகட்டும் என்று அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே பார்த்தசாரதியை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பார்த்தசாரதிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், பல வருடங்களாக இந்த கும்பல் தொழிலதிபர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து பணத்தை பறித்து வந்துள்ளனர்.

    இந்த கும்பலிடம் தங்களது பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதன்பின்னரே இதுவரை எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி எவ்வளவு பணத்தை இவர்கள் பறித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.

    அதேநேரத்தில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் எங்களிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பெயர் ரகசியம் காக்கப்பட்டு அவர்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
    • தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற முகவரியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

    அவர், மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டு உள்ளார்.

    அதனை நம்பிய இளைஞர் ரூ. 4 லட்சம் 88 ஆயிரத்து 159 பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்பி உள்ளார்.

    பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது31) என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று ராஜவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
    • திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகளாக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத்துள்ளனர்.

    அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த எழுத்தர் சி.பெரியசாமி என்பவரும், வங்கி செயலாளர் அ.பெரியசாமி என்பவரும் மோசடி செய்து சுமார் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து உரிய தொகையை பெரிய சாமியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் அமைதியாக இருந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி வங்கியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ்ணன் வங்கிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில் பொதுமக்களின புகாரின் பேரில் விசாரனை செய்த கூட்டுறவு துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரகம் எளச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு பயிர்க்கடன், நகைக்கடன், மத்தியகாலக் கடன், மாற்றுத்திறனாளி கடன், இட்டுவைப்பு கடன், உரம் மற்றும் உறுப்பினரிடம் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 அளவிற்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு அறிவுரையின் படி திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர்
    • மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்

    சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகைக் கடையில் 28.5 கிலோ தங்கக் காசுகளை வாங்கிவிட்டு ஏமாற்றியாக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் மீது நகைக் கடையின் மேலாளர் சந்தோஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "கடந்த 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை 38.6 கிலோ தங்கக் காசுகளை சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் வாங்கியுள்ளனர். 9.47 கிலோ தங்கக் காசுக்கு மட்டும் பணம் கொடுத்த சகோதரர்கள் மீதமுள்ள 28.5 கிலோ தங்கக் காசுக்கு பணம் தராமல் ஏமாற்றியதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததாக சகோதரர்கள் கணேஷ் மீது சுவாமிநாதன் மீது வழக்குகள் உள்ளன. மோசடி வழக்குகளில் சிக்கியதால் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

    நிதி நிறுவனம் நடத்தி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியதால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். 

    • ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
    • நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.

    சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு வகைகளில் நூதன மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சில நேரங்களில் பொதுமக்கள் ஏமாந்து பணத்தை இழந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சரண்ஜீத் கவுர் செல்போன் வாட்ஸ்-அப்பில் 2 போலீஸ் அதிகாரிகளின் படத்துடன் ஒரு அழைப்பு வருகிறது. அதில் தொடர்பு கொண்ட நபர், தான் டெல்லி காவல் துறையில் இன்ஸ்பெக்டர் என கூறுகிறார். பின்னர் அவர் அமைச்சரின் மகனை மிரட்டிய புகாரில் உங்களது சகோதரியை கைது செய்வதுள்ளதாக கூறி சரண்ஜீத் கவுரின் படத்தை அவரிடமே காட்டுகின்றனர். மேலும் நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.

    இதை கேட்டு ஆவேசம் அடைந்த சரண்ஜீத் கவுர், என்னை கைது செய்ததாக என்னிடமே கூறி போலீஸ் அதிகாரிகளாக நடித்து பணம் பறிக்க முயன்றதை அம்பலப்படுத்திய காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவுடன் அவரது பதிவில் இதுபோன்ற மோசடிகளை பற்றி எனக்கு தெரியும். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் என்னை காப்பாற்றி கொண்டேன். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இதனால் நீங்களும் இதுபோன்ற மோசடிகளை தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.



    • சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
    • வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
    • கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நத்தம்:

    சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர் (வயது51). இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் (52). சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10 கோடி பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கமிஷனாக ரூ.1 கோடி கொடுத்தால் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். அதற்கு தீபக்தேவ்கர் தன்னிடம் பணம் இல்லை நகைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்தேவ்கர் சஞ்சய் ஜெயின் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டபோது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ளோம். எனவே அங்கு வந்து நகைகளை தருமாறு கூறியுள்ளனர்.

    அதன் பேரில் நத்தம் வந்த தீபக்தேவ்கர் பஸ் நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 21-ம் தேதி கடையில் இருந்த 350 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.

    2 நாட்கள் கழித்து தீபக்தேவ்கர் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடைசிவரை கடன் வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தீபக்தேவ்கர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து நகைகளுடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×