search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heart disease"

    • பிறவி இதய குறைபாடு கொண்டிருக்கும் பல பெண்களும் அறிகுறிகள் அறியாமல் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் நோய் கண்டறிகின்றனர்
    • கர்ப்பிணிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும் மற்றும் இரத்த அளவு 50% வரை அதிகரிக்கும்.

    இதய நோய் கொண்டுள்ள இளம்பெண்கள் கருத்தரிக்க விரும்பினால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இயல்பாகவே கர்ப்பகாலத்தில் இதயத்துக்கு கூடுதல் பணி அளிக்கப்படுகிறது. அப்போது இதய பிரச்சனைகள் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம். இந்நிலையில் இதய கோளாறு கொண்ட பெண்களுக்கு இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். இந்த அபாயங்களை குறைக்க முடியுமா? இதயகோளாறு கொண்டுள்ள பெண்கள் கருத்தரிக்க முடியுமா என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

    சில பெண்கள் பிறக்கும் போதே இதய குறைபாட்டுடன் பிறந்திருப்பார்கள். சிலருக்கு இது குறித்து அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு கர்ப்பகாலம் வரையிலும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகளே இருக்காது. பிறக்கும் போதே குறைபாட்டுடன் பிறக்கும் பெண்கள் வளரும் போது இன்னும் சில பிரச்சனைகளை அதிகமாக கொள்ளலாம்.

    இதய நோய் கொண்டிருக்கும் பெண்கள் கர்ப்பம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தால் இதயத்தில் உண்டாகும் கூடுதல் மன அழுத்தம் சிக்கல்களை உண்டு செய்யலாம். கர்ப்பகாலத்தில் இதயம் எப்படி பம்ப் செய்கிறது. சில ஹார்மோன் மாற்றங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களை பாதித்து இதய அபாயத்தை அதிகரிக்கலாம். எனினும் பாதுகாப்பாக பெண் கருத்தரிக்கலாம்.

    அதே நேரம் பெரும்பாலும் பிறக்காத குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கும் இதய கோளாறு கொண்டிருந்தால் அப்பெண் கருத்தரிக்காமல் இருக்க மருத்துவர் அறிவுறுத்துவார். ஆனால் எதிர்பாராத விதமாக கர்ப்பமாகிவிட்டால் கர்ப்பம் முடிந்தவரை ஆரோக்கியமாக பாதுகாப்பாக இருக்க மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

    கர்ப்பம் தாயின் இதய நிலைகளை மோசமாக்கலாம். சில நேரங்களில் குழந்தை வளர்வதை பாதிக்கலாம். இதய நோய் கொண்ட பெண்கள் கருத்தரிக்கும் போது இவர்கள் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கொண்டவர்களாக உள்ளார்கள். மேலும் இவர்கள் இதயவியல் நிபுணர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

    லேசாக ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் இதயத்தில் முன்னர் சரிசெய்யப்பட்ட சிறிய துளைகள் போன்றவை கர்ப்பத்தில் சிக்கல்களை உண்டு செய்யாது.

    இதய செயலிழப்பு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பெருநாடி நோய் போன்றவை சிக்கல்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கலாம். இத்தகைய ஆபத்து கொண்ட கர்ப்பிணிகள் 1% என்பதால் இவர்கள் கருத்தரிக்க அனுமதி அளிப்பதில்லை.

    இதய நோய் இருப்பவர்கள் கருத்தரிக்க விரும்பினால் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும். இதய நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் எடுப்பவர்கள் இந்த மருந்துகள் கர்ப்பத்துடன் ஒத்துபோகிறதா அல்லது கர்ப்பத்தை பாதிக்குமா என்பது குறித்தும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு இதயம் சிறந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பரிசோதனைகள் எடுத்துகொள்ள வேண்டும். எந்த பரிசோதனையையும் தவிர்க்க கூடாது. அதே போன்று ஆரோக்கியமான பெண்களும் கருத்தரிப்புக்கு முன்பு இதய நோய் குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிறவி இதய குறைபாடு கொண்டிருக்கும் பல பெண்களும் அறிகுறிகள் அறியாமல் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் நோய் கண்டறிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதய நோயுடன் கருத்தரித்த பிறகு பராமரிப்பு குழுவை தேர்வு செய்யுங்கள். கார்டியோ மற்றும் மகப்பேறியல் குழு மூலம் திட்டமிடுங்கள். கர்ப்பகாலத்தில் உங்களுக்கு தேவைப்படும் மருந்துகள், பரிசோதனைகள், கண்காணிப்புகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

    கர்ப்பிணிக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும் மற்றும் இரத்த அளவு 50% வரை அதிகரிக்கும். அப்போது ரத்த அழுத்தம் குறையும். இது சில இதய நிலைகள் உள்ளவர்களுக்கு மேலும் ஆபத்தை அளித்துவிடலாம். இந்நிலையில் இரத்த ஓட்டம் மாற்றம் உண்டாகும். பிரசவத்தில் மாற்றம் இருக்கும். சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகு ஆறு வாரங்கள் முதல் எட்டு வாரங்கள் வரை அதிக ஆபத்து காலமாக இருக்கலாம். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அதனால் குழந்தையை பெற்ற பிறகும் தொடர்ந்து மருத்துவரை சந்திப்பது அவசியம்.

     நோய் அறிகுறிகள் கர்ப்பத்துக்கு முன்பு பாதிப்பை உண்டு செய்யாவிட்டாலும் கர்ப்பத்துக்கு முன்பு உங்கள் வாழ்க்கையை பாதிக்காவிட்டாலும் கர்ப்பத்துக்கு பின்பு அது பல பிரச்சனைகளை உண்டு செய்துவிடலாம். கர்ப்பகால உடல் மாற்றங்களே இதற்கு காரணமாகும்.

    இதய நோய் அதிக ஆபத்துள்ள கர்ப்பம் கொண்டிருக்கும் பெண்கள் கர்ப்பகாலத்திலும் அதற்கு பின்னரும் உணரும் அறிகுறிகளை மருத்துவரிடம் மறைக்க கூடாது.

    உடல் ஆரோக்கியத்தில் திடீர் மாற்றங்கள் இருப்பது, கவலை அறிகுறி, படபடப்பு, மார்பு வலி, சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

    • இன்றைக்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
    • மருத்துவரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்லது.

    இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் கணினி முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் நிலை இருக்கிறது. நவீன வாழ்க்கைமுறையும் அதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது.

    அப்படி உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதே நிலை தொடரும்போது இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றன.

    உட்காருவதற்கும், நிற்பதற்கும், உடற்பயிற்சிக்கும், தூங்குவதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அதனை மையமாகக்கொண்டு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 40 முதல் 75 வயது வரை உள்ள 2 ஆயிரம் பேரின் தினசரி செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. உட்காருதல், நின்றல், உறங்குதல், உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் தினமும் எவ்வளவு நேரம் ஈடுபடுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

    அதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தினமும் எந்தெந்த செயல்களுக்கு எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். அதன்படி தினமும் 6 மணி நேரம் வரை உட்கார்ந்திருக்கலாம், 5 மணி 10 நிமிடங்கள் வரை நிற்கலாம். இரண்டு மணி நேரம் 10 நிமிடங்கள் வரை லேசானது முதல் மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

    அதேபோல் 2 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் வரை மிதமானது முதல் தீவிரமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். 8 மணி 20 நிமிடங்கள் வரை தூங்குவதற்கு ஒதுக்கலாம் என்று நேரத்தை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்காருவதற்கு அதிக நேரத்தை செலவிட்டதை மாற்றியமைத்து லேசான உடல் செயல்பாடுகளில் கூடுதல் நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். அவர்களின் சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

    வயது, ஒட்டுமொத்த உடல்நலம், உடல் திறன், வேலை மற்றும் தனிப்பட்ட விருப்பம் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்வாழ்வுக்கு வித்திடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    • உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை.
    • மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன.

    இன்றைய உலகில் அசைவ உணவுகளை விரும்பாதவர்களே இல்லை. அதை பற்றி சொன்னாலே நம் உள்ளத்தில் உற்சாகம் ஊறும், நாவிலும் எச்சில் ஊறும். அசைவ உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிட்டாலும் கூட மாட்டு இறைச்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மாட்டு இறைச்சி சாப்பிடுவது நல்லது என்று ஒரு தரப்பினரும், இல்லை, அது கெடுதலானது என்று இன்னொரு பாதி மக்களும் கருதுகின்றனர்.

    மாட்டுக் கறியில், புரோட்டீன் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதேசமயம், கொலஸ்டிராலும் நிறைய உள்ளது. இதனால் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவீதத்தினர் இளம்வயதிலேயே மரணம் அடைகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தினமும் அல்லது அதிகமாக மாட்டிறைச்சி உட்கொண்டு வருபவர்களுக்கு இதயநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏனென்றால் மாட்டிறைச்சியில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன. இதனால் தமணிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதோடு அதன் வீரியமும் குறைந்து நாள்பட்ட நோய்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

    மாட்டுறைச்சியில் உள்ள கார்சினோஜென் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. அளவுக்கு அதிகமாக மாட்டிறைச்சி உண்ணும் போது உடலில் கார்சினோஜென் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டிறைச்சியில் அதிகளவு கலோரிகள் உள்ளது. எனவே இதனை அதிகமாக உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    எனவே மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் கோழிக்கறி மற்றும் மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாக உள்ளது என்று ஆயுவுகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க நாடுகளில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிடவர்களில் 13 சதவீதம் பேர் இதய பாதிப்பு மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு (சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக்) போன்றவை ஆகும். இதுவே இதயநோய் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன.

    அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக பருப்பு, மீன் போன்றவற்றை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்கிறது ஆய்வுகள்.

    • தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.
    • போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இரவு தூங்க செல்வதற்கு முன்பு செல்போனிலும், சமூக ஊடகங்களிலும் பொழுதை போக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு 10 மணியை கடந்த பின்பும் செல்போனில் மூழ்குபவர்களும் இருக்கிறார்கள்.

    இரவு 11 மணியை தாண்டிய பிறகுதான் தூங்குவது பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி தாமதமாக தூங்குவதும், காலையில் அவசர அவசரமாக எழுந்து வேலைக்கு புறப்பட்டு செல்வதும் பலருடைய வாடிக்கையாக இருக்கிறது.

    தினமும் இரவு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், தினமும் 7-9 மணி நேரம் தூங்குவதற்கு பரிந்துரைக்கிறது. ஆனால் நிறைய பேர் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது தொடர்ந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?


    தூங்கும் நேரம் குறைவது நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கும். இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். போதிய தூக்கமின்மை காரணமாக உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகக்கூடும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தூக்கத்தின் போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும். குறிப்பாக ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரை அளவுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.

    ''உங்களுக்கு போதுமான தூக்கம் வராதபோது, உங்கள் உடல் அதிக மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க வைத்துவிடுகிறது. தூக்கத்தின் போது, உங்கள் இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைகிறது. சுவாசம் சீராக நடப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது.


    இந்த செயல்முறை இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், அன்றைய நாளின் மன அழுத்தத்தில் இருந்து மீளவும் வழிவகை செய்கிறது. அதேவேளையில் உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காவிட்டாலோ அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நாளடைவில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும். இதய அமைப்பை சேதப்படுத்தும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் வழக்கம் தொடர்ந்தால் இதய நோய் அபாயங்களுக்கு மட்டுமின்றி நீரிழிவு நோய்க்கும் வழிவகுத்துவிடும்.

    • இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது.
    • கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

    மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம் ஆகும். உடல் முழுவதும் குருதியை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்திற்கு வரும் ஆபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இருதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும்.

    எல்லா வகையான இருதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இருதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.


    இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவது தான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது. இருதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி மட்டுமல்லாது மேலும் பல அறிகுறிகள் தென்படலாம். அவை கீழ்வருமாறு:

    சீரற்ற இதயத்துடிப்பு

    நெஞ்சில் அசௌகரியம்

    உடலின் இடப்புறத்தில் தோன்றும் வலி

    மயக்க உணர்வு

    தலைசுற்றல்

    தொண்டை அல்லது தாடை வலி

    உடற்சோர்வு

    தீராத இருமல்

    கால்கள், கணுக்கால், அடிவயிறு ஆகியவற்றில் வீக்கம்

    குறட்டை மற்றும் தூக்கக் கோளாறு


    துவக்கத்திலேயே கண்டறிந்தால் இருதய நோய்களை குணப்படுத்துவது எளிது. எனவே, இருதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஆரோக்கியமான உணவுடன் போதியளவு உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இதயம் நலமுடன் துடிக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை போதியளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சீரான உடல் எடை பேணுவதுடன், புகைப்பதை தவிர்த்து, மன இறுக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை இருதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால் அவற்றை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது.
    • மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம்

    சென்னை:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உயிர் வேதியியல் துறையை சேர்ந்த நிபுணர்கள், சென்னையை சேர்ந்த நரிக்குறவர் மக்களிடையே ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். அப்போது அவர்களின் உடலில் புதிய வகை மரபணு மாற்றத்தை கண்டுபிடித்தனர்.

    இந்த புதிய வகை மரபணுவானது அல்காப்டோனூரியா அல்லது கருப்பு சிறுநீர் நோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த புதிய வகை மரபணு தொடர்பாக ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 3 நாட்கள் தொடர் மருத்துவ கல்வி திட்டம் மற்றும் பகுப்பாய்வு உயிர் வேதியியல் குறித்த பயிலரங்கு நடந்தது. இந்த பயிலரங்கில் நரிக்குறவ மக்களிடையே கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மரபணு பற்றிய ஆய்வு அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து 110 மருத்துவர்கள் பங்கேற்றனர்.

    இந்த பயிலரங்கத்தில் அல்காப்டோனூரியா மரபணு மாற்றம் பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

    இந்த பயிலரங்கத்தில் பேசிய மருத்துவர்கள் கூறியதாவது:-

    அல்காப்டோனூரியா நோயை தோற்றுவிக்கும் புதிய வகை மரபணு மாற்றம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டுவலி மற்றும் இதயநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இவர்களுக்கு சிறுநீர் கருப்பு நிறத்தில் வெளியேறும். அல்லது காற்று பட்டவுடன் சிறுநீர் கருப்பு நிறத்தில் மாறும்.

    இது உடலில் ஹோமோ ஜென்டிசிக் அமிலம் எனப்படும் ரசாயனத்தை உருவாக்கி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மரபணு மாற்றமானது பரம்பரை வழியாக மிகவும் அரிதாகவே ஏற்படும். மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பெரிய அளவிலான பாதிப்பை தடுக்கலாம். மேலும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.
    • இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல்வேறு உடல்நல பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். உடற்பயிற்சிகள் வழங்கும் நன்மைகள் எண்ணற்றவை. வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் தடுக்கக்கூடிய 8 வியாதிகள் குறித்து பார்ப்போம்.

    இதயநோய்

    வழக்கமான உடற்பயிற்சி இதயத்தை வலுப்படுத்துவதற்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய காரணியாக அமையும். அதனால் இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும். ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் செயல்பாடுகள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    உடல் பருமன்

    உடல் பருமனை தடுப்பதற்கும், சீரான உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உடல் இயக்க செயல்பாடு முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும். அதனுடன் ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வது தசையின் வலுவை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரித்து உடல் திறனை அதிகரிக்க செய்யும்.

    டைப் - 2 நீரிழிவு நோய்

    வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதனால் டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்

    நடைப்பயிற்சி, நடனம், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கும். வழக்கமான உடல் செயல்பாடு எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலு இழப்பதை குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி மூட்டு வலியைக் குறைக்கும். நீச்சல், யோகா மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூட்டின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும். மூட்டுவலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

    மனநலக் கோளாறு

    வழக்கமான உடற்பயிற்சி, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். மனமகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல், நினைவாற்றல் வீழ்ச்சியை தடுக்கும்.

    புற்றுநோய்

    உடற்பயிற்சியால் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும், வழக்கமான உடல் செயல்பாடு மார்பகம், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் துணைபுரியும்.

    சுவாச நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி நுரையீரலின் செயல் திறனையும், சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும். ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி) பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏரோபிக் பயிற்சிகள் சுவாச செயல்பாடுகளுடன் இணைந்து நுரையீரல் திறன் மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாள்பட்ட நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து பல நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும். உடற்பயிற்சி, நோயை குணப்படுத்தாவிட்டாலும் மோசமடையாமல் தடுக்க உதவும்.

    முதுமை பருவத்தை எட்டுபவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தை தொடர்வது அவசியம். இது உடல் இயக்கம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். உடல் செயல்பாடு, அறிவாற்றல் செயல்பாடு, நினைவகம் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

    • இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
    • மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும்.

    மரிக்கா என்ற வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு பிறவியில் இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓடியாடி விளையாடிக்கொண்டும், பள்ளிக்கு சென்றுகொண்டும் இருந்தாள். திடீரென்று ஒரு நாள் மயக்கமடைந்து விழுந்தாள். சாதாரண மயக்கத்துக்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்தபோதுதான், அவளின் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

    இதயப் பாதிப்பினால் ரத்த ஓட்டம் சீர்குலைந்து மூளைக்கு ரத்தம் சரியாக செல்லாததாலேயே மயங்கி விழுந்திருக்கிறாள். இதய வால்வில் ஒரே வழியாக சென்று வர வேண்டிய ரத்தமானது, இருவழியாக சென்றுவரத் தொடங்கியது. மேலும் உள்ளே சென்ற ரத்தமானது முழுமையாக வெளியேறாமல், பாதி மட்டுமே வெளியேற, மீதி ரத்தம் ஒவ்வொரு முறையும் அவளின் இதயத்திலேயே தங்கிவிட்டது.

    இந்த அதிகப்படியான ரத்தத்தை தாங்குவதற்காக இதயம் பெருக்கத் தொடங்கியது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள மருத்துவமனையை மரிக்கா அணுகியபோது சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இந்தநிலையில் பிஜியை சேர்ந்த இப்பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயாரானது. முன்நாட்களில் தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாகவே இதயம் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இதனால் வீங்கிப் போய்விட்ட இதயத்தை அறுவை சிகிச்சை மூலமே சீரமைக்க முடியும் என மருத்துவக்குழு தீர்மானித்தது. சிகிச்சைக்குப் பின் நலமடைந்தாள் மரிக்கா.

     ஒரு தொண்டை நோய்த்தொற்று இதயத்தை இப்படியும் பாதிக்குமா? என கேள்வி எழலாம். ஆம், 15 நாட்களுக்கு மேல் தொண்டை நோய்த்தொற்றும் தொடர்ந்து காய்ச்சலும் இருந்தால் அலட்சியம் செய்துவிடாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் இந்நோய் விரைவாகப் பரவும். இந்நோய் ராணுவ வீரர்களையும் தாக்கியுள்ளது. எந்த வயதிலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

    • டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
    • செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.

    இரவில் போதுமான அளவு தூங்காவிட்டால் ஏற்படும் சோர்வு மறுநாள் முழுவதும் எதிரொலிக்கும். ''தூக்கமின்மை உடல் நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். போதிய நேரம் தூங்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வித்திடும்'' என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாள் இரவும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் தூக்கமின்மை ரத்த அழுத்த அளவை அதிகரிக்கச்செய்யக்கூடும். இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்க்கும் வழிவகுக்கும். தினமும் இரவில் 7 மணி முதல் 9 மணி நேரம் வரை தூங்குமாறு அமெரிக்க இதய சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

    தூக்கத்தின்போது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயல்புடையது. இதன் மூலம் சிறு, சிறு உடல்நல குறைபாடுகள் நீங்கிவிடும். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும். ''நீங்கள் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படும்போது உடல் அதிக மன அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்யும். அப்போது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    நன்கு ஆழ்ந்து தூங்கும்போது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்து மீளவும் உதவும். போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டாலோ, ஆழ்ந்து தூங்க முடியாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போகும். நாள்பட்ட அழற்சி, ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு வித்திடும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து இதய அமைப்பை சேதப்படுத்தும். நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும்.

    • இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும்.
    • புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மாறிவரும் வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் வருகின்றன. தற்போதைய வாழ்க்கை சூழலில் உணவு உள்ளிட்ட பல விஷயங்களை மக்கள் முறையாக பின்பற்ற முடிவதில்லை.

    இதனால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. மிகக்குறைந்த வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலர் மரணமடைவதை பார்க்க முடிகிறது. சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதய நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க உடற்பயிற்சி, முறையான உணவு பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் சமீப காலமாக இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பு உள்ளிட்ட பல இதயநோய் பாதிப்பு களுக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

    திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்சையளிப்பதில் நாட்டில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த ஆஸ்பத்திரியில் 4 மாத காலத்தில் 40 ஆயிரம் பேர் இதய நோய்க்கு சிகிச்சை பெறறுள்ளனர் என்ற அதிரச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி உள்ளிட்ட இதய நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளிப்பதில் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரி முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த புள்ளி விவரம் கேரள மாநிலத்தில் இதய நோய்பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயத்தை காட்டுக்கிறது. இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. நாளை இதய நோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது.

    • உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
    • ராகியில் புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட அமினோ அமிலங்கள் உள்ளன.

    கேழ்வரகில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு விவரங்களை பார்ப்போம். சிறுதானிய உணவுகளில் அரிசியை காட்டிலும் அதிகப்படியான புரதச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் உயிர் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆதலால் தான் மருத்துவர்கள் சிறுதானிய உணவுகளை தற்பொழுது அதிகப்படியாக பரிந்துரை செய்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் சிறுதானிய உணவுகளில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளன.

    அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த ராகியில் அமைந்துள்ள புரோலமைன், குளுட்டானின் உள்ளிட்ட உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. ராகியில் முளைகட்டி பொடியாக்கி குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பது பழங்காலம் தொட்டு நம் பழக்கத்தில் உள்ளது. மேலும் ராகி நூடுல்ஸ், ராகி பணியாரம், ராகி சேமியா, ராகி இடியாப்பம், ராகி அல்வா, ராகி தோசை, ராகி அடை போன்றவைகளை தயாரிக்க முடியும். மேலும் ராகி முறுக்கு, ராகி மிக்சர், ராகி கேக், ராகி பிஸ்கட், ராகி லட்டு போன்ற நொறுக்கு தீனி வகை பலகாரங்களையும் செய்யலாம். கேழ்வரகு மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு மாவு - ஒரு கப்

    அரிசி மாவு - அரை கப்

    கடலை மாவு- கால் கப்

    பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

    எள்- ஒரு ஸ்பூன்

    சீரகம் - 2 தேக்கரண்டி

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளர வேண்டும். அதன்பிறகு சூடாக இருக்கும் எண்ணெய்யை மாவுக் கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் காந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும். சுவையான ராகி முறுக்கு தயார்.

    • 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.
    • குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை நெருங்கவிடாமல் தற்காத்துக்கொள்ளலாம். சில நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனால் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.

    எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வயதுக்கு ஏற்ப நடக்கும் தூரம் மாறுபடுமா? வயதானவர்கள் குறைந்த தூரம் நடந்தால் போதுமா? என்ற கேள்வி நிறைய பேரிடம் எழுகிறது. ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலடிகளாவது எடுத்து வைத்து நடக்க வேண்டும். 10 ஆயிரம் காலடிகள் என்பது சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடப்பதற்கு சமமானது. அப்படி நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக புற்றுநோய் தொடர்பான நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்து வைத்து நடக்க முடியாவிட்டாலும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் காலடிகளாவது நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இருப்பினும் வயதுக்கு ஏற்ப நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

    குழந்தைகளை பொறுத்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்வது சாத்தியமில்லாதது. அவர்களை நடக்க சொல்லி கட்டாயப்படுத்துவதை விட ஓடியாடி விளையாட அனுமதித்தாலே போதுமானது. வழக்கமான விளையாட்டுகளுடன் குதித்தல், மெதுவாக ஓடுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வைக்க வேண்டும். பெரியவர்களை பொறுத்தவரை தினமும் 10 ஆயிரம் காலடிகள் எடுத்துவைத்து நடப்பது சிரமமானது. அவர்களால் 8 கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியாது. அதற்கு உடலும் ஒத்துழைக்காது.

    வயது அடிப்படையில் எந்தெந்த வயதினர் எவ்வளவு தூரம் நடக்கலாம் என்பது பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதன் முடிவு உங்கள் பார்வைக்கு...

    1. 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லது.

    2. 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் நடப்பதை இலக்காக கொள்ளலாம்.

    3. 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்கலாம்.

    4. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 8 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

    5. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகள் நடப்பதற்கு முயற்சி செய்யலாம்.

    6. 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகள் வரை நடக்கலாம்.

    7. உடல் எடையை குறைக்கும் நோக்கில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

    8. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 12 ஆயிரம் அடிக்கு மேலும் நடப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    ×