search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Exercise can prevent diseases"

    • உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.
    • இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல்வேறு உடல்நல பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். உடற்பயிற்சிகள் வழங்கும் நன்மைகள் எண்ணற்றவை. வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் தடுக்கக்கூடிய 8 வியாதிகள் குறித்து பார்ப்போம்.

    இதயநோய்

    வழக்கமான உடற்பயிற்சி இதயத்தை வலுப்படுத்துவதற்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய காரணியாக அமையும். அதனால் இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும். ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் செயல்பாடுகள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    உடல் பருமன்

    உடல் பருமனை தடுப்பதற்கும், சீரான உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உடல் இயக்க செயல்பாடு முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும். அதனுடன் ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வது தசையின் வலுவை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரித்து உடல் திறனை அதிகரிக்க செய்யும்.

    டைப் - 2 நீரிழிவு நோய்

    வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதனால் டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்

    நடைப்பயிற்சி, நடனம், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கும். வழக்கமான உடல் செயல்பாடு எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலு இழப்பதை குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி மூட்டு வலியைக் குறைக்கும். நீச்சல், யோகா மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூட்டின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும். மூட்டுவலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

    மனநலக் கோளாறு

    வழக்கமான உடற்பயிற்சி, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். மனமகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல், நினைவாற்றல் வீழ்ச்சியை தடுக்கும்.

    புற்றுநோய்

    உடற்பயிற்சியால் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும், வழக்கமான உடல் செயல்பாடு மார்பகம், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் துணைபுரியும்.

    சுவாச நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி நுரையீரலின் செயல் திறனையும், சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும். ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி) பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏரோபிக் பயிற்சிகள் சுவாச செயல்பாடுகளுடன் இணைந்து நுரையீரல் திறன் மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாள்பட்ட நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து பல நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும். உடற்பயிற்சி, நோயை குணப்படுத்தாவிட்டாலும் மோசமடையாமல் தடுக்க உதவும்.

    முதுமை பருவத்தை எட்டுபவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தை தொடர்வது அவசியம். இது உடல் இயக்கம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். உடல் செயல்பாடு, அறிவாற்றல் செயல்பாடு, நினைவகம் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

    ×