என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
- வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று அம்பேத்கார் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. த.வெ.க. இன்னும் மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் பெறவே இல்லை. இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சியுடன் யார் சேர்ந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு எந்த கவலையுமில்லை.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் தி.மு.க. அரசு சரியான பாதையில் செல்கிறது. தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய யார் நினைத்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் அனுப்பியுள்ளேன். பி.எல்.ஓ. எனப்படும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று படிவங்களை வழங்கி கையெழுத்து பெறவில்லை. ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தலை நடத்துங்கள், வாக்காளர்கள் அவர்களாக வாக்களிக்கட்டும். திண்டுக்கல்லில் உயிருடன் உள்ள தி.மு.க. நிர்வாகியை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட நரிக்கல்பட்டி, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளர் குளறுபடி நடந்துள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் இடமாற்றம் செய்து விட்டதாக பல படிவங்களை தள்ளுபடி செய்து விட்டனர். இது போன்று பல்வேறு தொகுதிகளிலும் குளறுபடி நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என்று மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதேபோல காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர கோவை ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை போடப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது.
- நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது.
மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயரை சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அண்மையில் கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.
- திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.
* திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
* சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
- பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற 19-ந்தேதி விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
- சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.
உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர்.
நேற்று 4-வது நாளாக இதே சூழ்நிலை நீடித்ததால் ஒரேநாளில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் சுமார் 220 விமானங்கள், பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களும், ஐதராபாத்தில் 90-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் மட்டும் 104 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இயக்கப்பட்ட விமானங்களும் கடும் கால தாமதத்தை சந்தித்தன. இதனால் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் ரூ.41,000-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து டெல்லிக்கு விமான கட்டணம் ரூ.35,000-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான கட்டணம் ரூ.26,000-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல விமான கட்டணம் ரூ.25,000-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் இருந்து கோவைக்கு நாளை செல்ல விமான கட்டணம் ரூ.71,000-ஆக உயர்ந்துள்ளது.
- ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.
கோட்டூர்புரம்:
சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சரின் தாயுமானவரின் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் கபடி விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதே லட்சியம்.
* விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றி முன்னுக்கு கொண்டு வருகிறோம்.
* அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தி.மு.க. அரசு உறுதி செய்திருக்கிறது.
* ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை.
* அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்தான் முக்கியமானது.
* சென்னை, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.80 கோடி செலவில் மாதிரி விடுதிகள்.
* ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.
* ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.
* உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பயில அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் செயல்படுத்துகிறோம்.
* சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிக்காக ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
* 9,659 மாணவர்களுக்கு ரூ.90 கோடி அளவுக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
* தி.மு.க. ஆட்சியில் 385 மாணவர்கள் தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர்,
* சட்டப்படிப்பு என்பது நமக்கு மிகவும் முக்கியமானது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
* இவ்வளவு நேரம் நான் பட்டியலிட்ட திட்டங்கள் அனைத்தும் எள் முனையளவுதான்.
* அனைத்து தடைகளையும் உடைத்து நாம் முன்னேற வேண்டும்.
* ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என்பது உறுதி என்றார்.
- சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.
- அம்பேத்கர் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் #அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது.
- இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார்.
கோபி:
கோபியில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட அமைப்பு செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம், மாவட்ட அலுவலகங்களில் நடைபெறுகிறது. தலைமை உத்தரவின் படி, அம்பேத்கர் புகழை போற்றும் வகையில் நடைபெறுகிறது.
ஆணவம், உண்மை மறைக்கும் கற்பனை உலகில் வாழ கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக தலைவர் விஜய் திகழ்கிறார். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எழுச்சி நாயகன் மட்டும் அல்ல தமிழ்நாட்டின் எதிர்கால சக்தியாக உருவாகி உள்ளார் என்றார்.
- சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.
- இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.
சென்னையில் ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு எல்லோருக்குமான மாநிலம். இங்கு பிரிவினை எடுபடாது.
* சனாதனம் என்பது இறைக்கொள்கை அல்ல. சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.
* பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.
* பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சியிலும் பிரிவினை எப்போதும் எடுபடாது.
* ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்பரம்-காசி ஆன்மிக பயணத்தில் 602 பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
* திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?
* இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3-வது யூனிட்டிலும் நேற்று இரவு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
- 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் அனுப்பப்படுகிறது
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதலாவது மற்றும் 2-வது யூனிட்டுகள் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் சேதமானது.
இந்த நிலையில் 4-வது மற்றும் 5-வது யூனிட் பராமரிப்பு பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு 3-வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 3-வது யூனிட்டிலும் நேற்று இரவு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் குறைவான அளவில் மின்சாரம் நுகர்வு நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தியை தொடங்காவிட்டால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகும் என கூறப்படுகிறது.
- குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும்.
- சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம், குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகிற 25, 27, 29, 31 மற்றும் ஜனவரி 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டி செல்லும்.
மறுமார்க்கத்தில் 26, 28, 30 மற்றும் ஜனவரி 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும்.
இதேபோல மேற்கண்ட நாட்களில் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஊட்டியில் இருந்து மதியம் 2.50, மாலை 3.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் குன்னூர் செல்லும். மறுமார்க்கத்தில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 10.45 மணிக்கு ஊட்டி செல்லும்.
மேலும் வருகிற 25, 26, 27, 28, 29, 30, 31 மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 16, 17, 18, 24, 25, 26-ந்தேதி வரை குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். அதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.
ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அவற்றில் முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். பின்னர் அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
இரண்டாவது சுற்று 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும்.
மூன்றாம் சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். இந்த சிறப்பு மலை ரெயில்களில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






