search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராம்பட்டினம்"

    • வீராம்பட்டினம் கடற்கரை பட்டினம் அதனால் கங்கையம்மன் என்று மக்கள் வழிபட்டார்களாம்.
    • கங்கையம்மன் தான் பிற்காலத்தில் செங்கழுநீர் அம்மனாக விளங்கியதாக கூறுவர்.

    வீராம்பட்டினம் ஊருக்கு நடுவில் ஒரு வேப்ப மரம் இருந்ததாம். அந்த மரத்தடியில் ஒரு பெண் வந்து உட்கார்ந்து இருந்தாராம். மக்கள் எல்லாரும் போய் அந்த பெண்ணை தங்கள் வீட்டுக்கு அழைத்தார்களாம். அந்த பெண் யார் வீட்டுக்கும் போகாமல் வேப்ப மரத்தடியில் தூங்குவாராம். பால் கொடுத்தால் மட்டும் குடிப்பாராம்.

    நான் இந்த ஊரையும் மக்களையும் காப்பாற்ற வந்து இருக்கிறேன். யாரும் பயப்படவேண்டாம் என்று அந்த பெண் கூறினாராம். நான் இறந்து விட்டால் இந்த வேப்ப மரத்தடியில் புதைத்து விடுங்கள் என்று கூறுவாராம்.

    சில காலம் கழித்து அந்த பெண் இறந்து விட்டார். அவர் சொன்னது போல் வேப்பமரத்தடியில் அந்த பெண்ணின் உடலை புதைத்து விட்டார்கள். ஆனால் ஊர் மக்கள் பயந்து போய் இருந்தார்கள். இடுகாட்டில் புதைக்க வேண்டிய பிணத்தை ஊர் நடுவில் புதைத்து விட்டோமே என்று புலம்பினார்கள்.

    ஊரில் மின்சாரம் இல்லை, மாலையில் சூரியன் மறைந்த உடனே மக்கள் வீட்டுக்குள் போய்விடுவார்கள். இரவில் வெளியில் வரமாட்டார்கள். ஊரில் யாராவது இறந்து விட்டால் அந்த தெருவில் இரவானால் யாரும் நடமாட மாட்டார்கள். இறந்தவர் வந்து பிடித்துக் கொள்வார் என்று பயந்து வீட்டுக்குள் இருப்பார்களாம்.

    வீராம்பட்டினத்துக்கு அரியாங்குப்பத்தில் இருந்து தான் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், பயிறு, காய்கள் வாங்க வர வேண்டும். அரியாங்குப்பத்துக்கும் வீராம்பட்டினத்துக்கும் ஒத்தையடி பாதை தான் இருந்ததாம். ஒத்தையடிப் பாதையில் இருபுறமும் சவுக்குத்தோப்பு, முந்திரித்தோப்பு, மாந்தோப்பு, சப்பாத்தி முள் இருக்குமாம்.

    வீராம்பட்டினத்துக்கும் அரியாங்குப்பத்துக்கும் நடுவில் சுடுகாடு, இடுகாடு இருந்ததாம். இப்போதும், இருக்கிறது. அரியாங்குப்பத்தில் பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள். சூரிய வெளிச்சம் இருப்பதற்குள், இருட்டுவதற்குள் வீராம்பட்டினம் வந்து விடுவார்களாம்.

    அந்த பெண்ணை புதைத்த வேப்ப மரத்தடியில் பெண்கள் விளக்கு வைத்து வணங்கி வழிபடுவார்களாம். அவர்கள் வேண்டிக் கொண்டது போல் நல்லது நடக்குமாம். அம்மா தாயே! இன்றைக்கு மீன் அதிகம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் அப்படியே கிடைக்குமாம்.

    அது மட்டும் அல்ல! அரியாங்குப்பம் போகும் போது அந்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் வேண்டிக் கொண்டு தாங்கள் நடந்து போனால் தங்களுக்கு முன்னால் ஒரு கருப்பு உருவம் போவது போல் மக்கள் உணர்ந்தார்களாம்! அந்த பெண் புதைக்கப்பட்ட வேப்பமரத்தடியில், சமாதியின் தலை மாட்டில் 3 கற்களை வைத்துத் தாயே, அம்மா எங்களை காக்க வந்த கடல்தாயே என்று வேண்டி வணங்கி வழிபட்டார்களாம். அதனாலேயே பயம் இல்லாமல் மக்கள் ஊருக்குள் நடமாடினார்களாம். ஆண், பெண், இளம்பெண், இளைஞர்கள் என எல்லோரும் வழிபடத் தொடங்கினார்களாம்.

    ஒரு நாள் ஒரு பெண் மீது சாமி வந்து அடியே நான் யார் தெரியுமா? இந்த அகிலத்தைக் காப்பாற்ற வந்த பராசக்தி அம்மன். இந்த உலகத்தையும் இந்த ஊரையும் மக்களையும் காக்க அவதரித்த தெய்வம், நான் படுத்து உறங்கும் இடத்தைத் தோண்டினால் ஒரு நாகம் வரும் அதை அப்புறப்படுத்தி விட்டு எனக்குக் கோவில் கட்டி வழிபடுங்கள். உங்களை காக்கும் தெய்வமாக இருப்பேன், உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்று கூறி மலையேறி விட்டதாம். கிராமங்களில் சாமி ஆடியவர்கள் கூறியதைக் கேட்டுக் கற்பூரம் ஏற்றி காட்டினால் அமைதியாகி கீழே விழுந்து விடுவார்கள். அதைத்தான் சாமி மலையேறிப்போச்சி என்று சொல்வார்கள்.

    சாமியாடி சொன்ன மாதிரி ஊர் மக்கள் ஒன்று கூடி பள்ளம் தோண்டினார்களாம். அங்கு ஒரு புற்றும் அதில் பாம்பும் இருந்ததாம். பாம்பு வெளியே வந்து மறைந்து விட்டதாம். அங்கு சிறு கோவில் கட்டி அம்மனை வணங்கி வழிபட்டார்களாம். வீராம்பட்டினம் கடற்கரை பட்டினம் அதனால் கங்கையம்மன் என்று மக்கள் வழிபட்டார்களாம். ஊரில் உள்ள மக்கள் குறிப்பாக பெண்கள், இளம்பெண்கள் தினமும் காலையில் இங்கு வந்து வழிபடுவார்களாம். தாங்கள் நினைத்தக் காரியம் நடக்குமாம். இந்த கங்கையம்மன் தான் பிற்காலத்தில் செங்கழுநீர் அம்மனாக விளங்கியதாக சிலர் கூறுகிறார்கள்.

    • கடல் வழியாகத்தான் காரைக்காலுக்குப் போவார்கள்.
    • வீராம்பட்டினம் வீரராகவ செட்டியார் கோவில் தலைவராக இருக்கிறார்.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1948-க்கு முன் இந்தியாவை ஆங்கி லேயர்கள் ஆட்சி செய்தார்கள். தமிழ்நாடும் அதில் அடங்கும். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தார்கள்.

    ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஏனாம், கேரளாவில் உள்ள மாகி, காரைக்கால், புதுச்சேரி இவை 4 பிராந்தியங்களும் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியாக நடந்து கொண்டு இருந்தது. அப்போது சாலை, போக்குவரத்து, மின்சாரம் இல்லாத காலங்கள். கடல் வழியாகத்தான் காரைக்காலுக்குப் போவார்கள்.

    புதுச்சேரியைப் புதுவை என்றும் வேதபுரி என்றும் அழைத்தார்கள். புதுவை சுவர்னர் பாய்மரக் கப்பலில் கடல் வழியாகக் காரைக்காலுக்குச் செல்வது வழக்கம், ஒருமுறை கடலூர் ரெட்டி சாவடிக்குக் கிழக்கே கடலில் ஆங்கிலேயர் பாய் மரக்கப்பல் ஆங்கர் போட்டு இருந்தது. அந்தக் கப்பலைக் கடந்து போனால் சண்டை ஏற்படும். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் கவர்னர்.

    கவர்னர் மாளிகையில் வேலை செய்யும் ஒருவர். 'என்ன அய்யா சோகமா இருக்கீங்க' என்று கேட்க, நாளைக்குக் காரைக்கால் செல்ல வேண்டும். வழியில் ஆங்கிலேயரின் கப்பல் ஆங்கரில் இருக்கிறது. அதான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று

    கவர்னர் கூறினார். ஒரு நாள் இரவு கவர்னர் கடற்கரைக்கு வந்து இருக்கிறார். என்ன தெற்கே ஊரில் தீப்பந்தம் தெரியது. வெடி சத்தம் கேட்குது என்ன என்று கவர்னர் கேட்டாராம்.

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் திருவிழா நடக்குது என்றும் அம்மன் சக்தியைப் பற்றியும் அவரிடம் கூறி இருக்கிறார்கள். அப்போது கவர்னர் திருவிழாவை பார்க்கப் போக வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அப்போது வீராம்பட்டினம் வீரராகவ செட்டியார் கோவில் தலைவராக இருக்கிறார். அவரை அழைத்து வந்து ஆலோசனை கேட்டால் வழி கிடைக்கும் என்று கவர்னரின் பணியாள் கூறினார்.

    அன்று மாலையில் வீரராகவ செட்டியாரை அழைத்து கவர்னர் ஆலோசனை கேட்டார். அப்போது நாளைக்கு காலையில் நீங்கள் காரைக்காலுக்குப் போகும் போது அந்த கப்பல் அங்கு இருக்காது. நீங்கள் தங்கு தடை இல்லாமல் போய் வரலாம் என்று

    வீரராகவ செட்டியார் கூறினார்.

    கவர்னருக்கு ஒன்றும் புரியவில்லை. வேடிக்கையாக இருக்கிறது. அவர் எப்படிச் சொல்லுகிறார், காரைக்காலுக்குப் போக முடியுமா? என்று கவர்னருக்குப் பல கேள்விகள் எழுந்தது. அடுத்த நாள் காலையில் கடற்கரையில் வந்து பார்த்தார்.

    ஆங்கிலேயர் கப்பல் கடலில் நங்கூரம் போட்டு இல்லை. உடனே தன் பாய்மரக்கப்பலில் கிளம்பிக் காரைக்காலுக்குப் போனார். அங்கு வேலைகளை முடித்துக் கொண்டு புதுவைக்கு வந்தார். வீரராகவ செட்டியாரைப் பார்க்க வீராம்பட்டினம் கவர்னர் வந்தார். கவர்னரைத் கோவிலில் வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தார் வீரராகவர் செட்டியார்.

    அப்போது எப்படி ஒரே இரவில் ஆங்கிலேயர் கப்பல் காணாமல் போனது என்று கவர்னர் கேட்டார். நடு இரவில் கட்டு மரத்தில் 4 ஆட்கள் போய் (அலவாங்கு) கடப்பாறையால் குத்தி கப்பலைக் கடல் அடியில் அழுத்தி விட்டோம் என்று வீரராகவச் செட்டியார் கூறினார்.

    வீரராகவ செட்டியாரின் வீரத்தையும், துணிச்சலையும் பாராட்டினார். செங்கழுநீர் அம்மனின் வரலாற்றையும் அதன் அருமை பெருமைகளையும் அதன் சக்தியையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 10 நாள் அம்மனுக்குத் திருவிழா நடக்கும். மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறும் என்று வீரராகவ செட்டியார் தெரிவித்தார்.

    இப்படி சக்தி உள்ள அம்மனின் தேரோட்டத்தை இனி மேல் ஆண்டு தோறும் நான் தொடங்கி வைக்கிறேன்; நான் வடம் பிடித்து தேரை இழுத்து ஆரம்பிக்கிறேன் என்று கவர்னர் கூறினார். அவர் கூறியது போல் ஆண்டுதோறும் கவர்னர் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    புதுவைப் பகுதியில் வேறு எந்தத் கோவிலுக்கும் இந்த மாதிரி கவர்னர் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கியது கிடையாது. வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு மட்டும் இந்தப் பெருமை உண்டு.

    • ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
    • இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கை நடைபெறும்.

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். முத்தியால்பேட்டை செங்குந்தர் மரபினர் சார்பில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவில் உபயதாரர்களான பைபர் கட்டுமர உரிமையாளர்கள், தனியார் ஊழியர்கள், மில் தொழிலாளர்கள், விசைப்படகு உரிமையாளர்கள், சான்றோர் குல மரபினர்கள், சீமென்கள் எனப்படும் கப்பல் என்ஜினீயர்கள், விசைப்படகு தொழிலாளர்கள், ஆற்றில் தொழில் செய்வோர் என ஒவ்வொரு நாளும் விழா களை கட்டும்.

    விழா நடைபெறும் நாட்களில் இரவு இன்னிசை கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம், வானவேடிக்கையுடன் சாமி வீதியுலா என ஒவ்வொரு உபயதாரர்களும் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை நடத்துவர். சினிமா பின்னணி பாடகர்கள், சினிமா இசை அமைப்பாளர்கள், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை போட்டி போட்டுக்கொண்டு ஏற்பாடுகளை செய்வார்கள்.

    இந்த விழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளாமானோர் வருவார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டி, பொட்டி வண்டி கட்டிக்கொண்டு விழா தொடங்கும் நாளில் இருந்து விழா முடியும் வரை வீராம்பட்டினத்திலேயே தங்கியிருந்து நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.

    வீராம்பட்டினம் தேரோட்ட விழாவுக்கும், முத்து பல்லக்கு விழாவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நாளடைவில் இரு சக்கர வாகனம் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பெருகி விட்டதால் தற்போது சிறப்பு பஸ்கள் விழாவுக்கு இயக்கப்படுவது படிப்படியாக குறைந்து விட்டது.

    மேலும் வெளியூர்களில் இருக்கும் வீராம்பட்டினம் மீனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து விழா முடியும் வரை தங்கியிருந்து விழாவை கண்டு களிப்பர். அவர்களுக்கு வீராம்பட்டினம் மீனவர்கள் முகம் சுளிக்காமல் தினமும் விருந்து வைத்து உபசரிப்பர்.

    • ஆற்றின் இரு புறங்களிலும் செங்கழுநீர் பூ மலர் பூத்து இருக்கும்.
    • செங்கழுநீர் பூவை எடுத்து வந்து அம்மனுக்கு மாலையாக கட்டி சாத்தினார்கள்

    மன்னர்கள் ஆட்சி செய்த போதும், ஆங்கிலேயர் ஆட்சி செய்த போதும் புதுச்சேரியில் பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சி செய்த போதும் தரைவழி ஆற்றின் வழியாக படகின் மூலம் போக்குவரத்து நடந்து இருக்கிறது.

    ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்கு போகவும், சரக்குகள் போகவும் ஆற்றையும் படகையும் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆந்திரா மாநிலம் தொடங்கி தமிழ்நாடு, புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி இந்து மகாகடல் வரையில் பக்கிங்காம் கால்வாய் செல்லுகிறது.

    அந்த கால்வாய் வழியாகத் தான் மக்களுக்கு சரக்குகள் போக்குவரத்து நடந்து இருக்கிறது. ஆற்றின் இரு புறங்களிலும் செங்கழுநீர் என்ற பூ மலர் பூத்து இருக்கும்.

    ஆற்றில் கட்டை உருளில் அம்மன் கிடைத்ததாலும் அம்மன் கழுத்து அளவு உருவம் அந்த கட்டையில் பதிந்து இருந்ததாலும் செங்கழுநீர் பூ பூத்து இருக்கும் ஆற்றில் கிடைத்ததாலும் அம்மனுக்கு செங்கழுநீர் அம்மன் என்ற பெயர் வைத்து அழைத்தார்கள்.

    செங்கழுநீர் பூவை எடுத்து வந்து அம்மனுக்கு மாலையாக கட்டி சாத்தினார்கள் அந்த பூவினால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்கள். அந்த பூவில் இருந்து வரும் அபிஷேகத்தண்ணீரை பக்தர்கள் எடுத்துக் கண்ணில் ஒத்திக் கொள்வார்கள்.

    முகத்தில் பூசிக்கொள்வார்கள். அதனால் கண்பார்வை நன்றாகத் தெரியும் என்று மக்கள் கூறினார்கள். செங்கழுநீர் பூ மலர்ந்த ஆற்றில் அம்மன் கிடைத்ததால் அம்மனுக்கு செங்கழுநீர் அம்மன் என்று பெயர் வந்தது.

    • சப்த கன்னிகள் சன்னதியில் இருக்கிறார்கள்.
    • சப்தகன்னியை வழிபட்டால் நோய் நொடியின்றி காப்பாற்றுவாள்.

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி, கன்னிகள் தெய்வம், முருக கடவுள், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன.

    நவக்கிரக சன்னதியில் சனிக்கிழமைகளில் ஆண்கள், பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

    சனிபிடித்து கொண்டவர்கள் சனிக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் நவக்கிரகங்களையும் சனிபகவானையும் சுற்றி வந்து வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் சனிதோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    சப்த கன்னிகள் சன்னதியில் இருக்கிறார்கள். கல்யாணம் ஆகாத பெண்கள் இந்த நவகிரக கோவில் கன்னிகளுக்கு விளக்கேற்றி வழிபட்டால் கல்யாணம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் கன்னியை வழிபட்டால் நோய் நொடியின்றி காப்பாற்றுவாள் என்பார்கள்.

    சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் புஷ்பலிங்கம் இவர் வீராம்பட்டினம் வந்து தங்கி விட்டார். அவருக்கு இனியவன் என்ற மகன் உண்டு.

    புதுச்சேரியில் லாட்டரி சீட்டு அரசு நடத்தியது. அதில் புஷ்பலிங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. அவர் முருக பக்தர். தன் சொந்தச் செலவு செய்து செங்கழுநீரம்மன் கோவிலில் முருகன் சன்னதி கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஊரில் காவடி எடுப்பதும் இரவு முருக கடவுள் வீதி உலா வருவதும் வழக்கமாக இருக்கிறது.

    செங்கழுநீர் அம்மனுக்கு பூஜை செய்வதற்கு முன் விநாயகருக்கு பூசை செய்வார்கள். இதற்காக விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    முதலில் கணபதி பூஜை நடந்த பின்தான் அம்மனுக்கு பூசை நடைபெறும்.

    இக்கோவில் தனி சன்னதியாக அமை ந்துள்ள துர்க்கை அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் வந்து நெய்விளக்கேற்றி வழிபடுவார்கள்.

    சுமங்கலியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்வார்கள்.

    கன்னிப் பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.

    • புதுவைப் பகுதியில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன.
    • மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள்.

    புதுவை மக்கள் அனைவரும் வில்லியனூருக்கு வந்து தங்கி விழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலை நிறுத்திய பின் அவரவர் ஊருக்குப் போக வேண்டும் என்று சாதிக்கு ஒரு மடம் கட்டினார்கள்.

    அந்த மடத்தில் தங்கி உண்டு, உறங்கி, விழா பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மீனவர்களுக்கு 3 மடம் கட்டினார்கள்.

    1. பட்டினவர் மடம் 2. செம்படவர் மடம் 3, பனிச்சவர் மடம் என 3 மடங்களை கட்டிக்கொடுத்தார்கள். புதுவை பகுதியில் உள்ள கடற்கரையோர மீனவர்களும் ஆற்றில் மீன் பிடிக்கும் செம்படவர்களும் மீனவர்களுக்கு உதவிகள் செய்யும் பனிச்சவர்களும் வில்லியனூரில் திருவிழா காலங்களில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

    புதுவைப் பகுதியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையில் 15 மீனவ கிராமங்கள் உள்ளன. இவைகளில் பெரிய மீனவ கிராமம் வீராம்பட்டினம் ஆகும்.

    வீராம்பட்டினம் கிராமப்பஞ்சாயத்தும் பொது மக்களும் முன்னிருந்து கோவில் விழாவில் கலந்து கொள்வார்கள்.

    கடற்கரையோரம் உள்ள மீனவர்கள், உறவு முறையினர், பட்டினவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கித் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு தேரை இழுத்து நிலைநிறுத்துவார்கள்.

    அதேபோல் ஆற்றில் மீன் பிடிப்பவர்களும் செம்படவர் மடத்தில் தங்கி சமைத்து உண்டு உறங்கி தேரை இழுத்து நிலை நிறுத்துவார்கள். பனிச்சவர்களும் பனிச்சவர் மடத்தில் தங்கிச் சமைத்து உண்டு உறங்கி தேர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

    வில்லியனூர் கோகிலாம்பிகை மற்றும்

    திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு மீனவர்களுக்கு என முக்கியத்துவம் கொடுத்தார்கள். தேர்த்திருவிழா அன்று தேரைவடம் பிடித்து இழுத்து மறுபடியும் நின்ற இடத்தில் நிலை நிறுத்துவது மீனவர்கள்.

    வில்லியனூர் ஊருக்கு நடுவில் கோவிலின் நான்கு புறமும் மாட வீதி, மண்ரோடு அந்த ரோட்டில் தேர் இழுப்பதற்கு வலுவான ஆட்கள் மீனவர்கள் தான் என்று உணர்ந்தார்கள்.

    மீனவர்கள் பெரிய வலை போட்டு இழுத்து பழக்கப்பட்டவர்கள். கைகள் காய்ப்பேறி இருக்கும். கைகள் மரமர என்று இருக்கும். மாட வீதியில் மண் வீதியில் மீனவர்கள் தேரை வடம் பிடித்து தேவஸ்தானத்தை சுற்றி வந்து நிலை நிறுத்துவார்கள். இந்த சம்பவம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

    • வீடுகளுக்கும், கடலுக்கும் இடையில் 150 மீட்டர் தூரம் இருக்கும்.
    • தெப்பக்குளத்தில் தண்ணீர் கொப்பளித்தது.

    புதுச்சேரி மாநிலத்தில் நீண்ட கடற்கரை மணல் பரப்பு உள்ள இடம் வீராம்பட்டினம் ஆகும். சுமார் 150 மீட்டருக்கு வீடுகளுக்கும், கடலுக்கும் இடையில் உள்ள தூரம் இருக்கும்.

    வெள்ளை மணல் அழகாக இருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள், இளைஞர்கள் எல்லோரும் காலையில் பந்து, கபடி, கொந்தம், பாரி, கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து விளையாடுவார்கள்.

    அதுபோல் கடந்த 26.12.2004 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் காலையில் கடற்கரை மணல் பரப்பில் மாணவர்களும் இளைஞர்களும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். பெரியவர்களும் வலைகளைச் சீர்படுத்திக் கொண்டு இருந்தனர்.

    அப்போது காலை சுமார் 7 மணிக்கு தேவஸ்தானத்தின் தெப்பக்குளம் தண்ணீர் பொங்குகிறது என்று செய்திகேட்டு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் இளைஞர்கள், பெரியவர்கள் எல்லோரும் ஓடிப்போய் தெப்பக்குளத்தை பார்த்தார்கள். ஆச்சரியமாக இருந்தது.

    தண்ணீரை ஓர் அண்டாவில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் சூடு ஏறி அண்டாவில் தண்ணீர் எப்படி கொப்பளிக்குமோ அப்படி தெப்பக்குளத்தில் தண்ணீர் கொப்பளித்தது.

    அந்த சமயத்தில் (சுனாமி) ஆழிப்பேரலை வந்தது. கட்டுமரங்களையும் வலைகளையும் இழுத்துச் சென்றது. அந்த சமயத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெரியவர்களும் தெப்பக்குளத்தைப் பார்க்காமல் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்தால் சுனாமி இழுத்து சென்று இருக்கும். எத்தனை பேர் கடலுக்கு இரையாகி இருப்பார்கள் என்று சொல்லி இருக்க முடியாது.

    பல பேர் இறந்து இருப்பார்கள் அது தவிர்க்கப்பட்டது. இது செங்கழுநீர் அம்மனின் மகிமை என்று எல்லோரும் கூறி வருகிறார்கள். மக்கள் மடிவதை அம்மன் விரும்பாமல் தன் சக்தியால் திசை திருப்பி விட்டார் என்று கூறி மக்கள் சந்தோஷம் அடைந்தார்கள்.

    ×