search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி சிறைபிடிப்பு"

    • லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அதனை மரியகிரி பகுதியில் மடக்கி பிடித்தனர்.
    • அபராத தொகை கட்டிய பின்னர் வாகனம் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    களியக்காவிளை:

    கேரள-தமிழக எல்லைப்பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக தினமும் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

    இதில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காலியான சரக்கு வாகனங்கள், பணத்திற்கு ஆசைப்பட்டு கேரளாவில் இருந்து புழுக்கள் நெளியும் மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை உள்ளது. இந்தச் செயல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

    இதனால் இங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அந்த வழியே செல்பவர்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக் கொண்டு சென்று வருகின்றனர். எனவே கழிவுகள் வரும் லாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், கேரள கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை கேரளாவில் இருந்து களியக்காவிளை போலீஸ் வாகன சோதனை சாவடியை கடந்து ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது.

    அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள், அதனை மரியகிரி பகுதியில் மடக்கி பிடித்தனர். ஆனால் லாரி பக்கத்தில் பொதுமக்களை செல்ல விடாமல், அதன் டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை சோதனை செய்த போது அதில் கோழி கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை செய்த போது, கோழி கழிவுகளை கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டுவதற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு கோழிக்கழிவுகளை கொண்டு வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    அபராத தொகை கட்டிய பின்னர் அந்த வாகனம் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    • எங்கள் கிராமத்திற்கு வரும் தார் சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்துள்ளது.
    • அதிகளவில் பள்ளம் தோன்டி கிராவல் மண் எடுப்பதால் மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மல்லிக்குட்டை பஞ்சாயத்து.

    இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏரியில் இரண்டு நாட்களாக அதிக பாரம் ஏற்றும் டிப்பர் லாரிகளில் ஏரிகளில் இருந்து கிராவல் மண் எடுத்துச் செல்லப்பட்டது.

    இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று பொக்லிங் எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.

    இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறும்போது இரண்டு நாட்களாக அதிக பாரம் ஏற்றும் டிப்பர் லாரிகளில் ஏரியிலிருந்து கிராவல் மண் கடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து டிப்பர் லாரி உரிமையாளரிடம் கேட்டால் அரசு அனுமதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஓசூர்-அதியமான் கோட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் செல்கின்றோம் என்று தெரிவிக்கின்றனர்.

    மண் எடுப்பதற்கான அனுமதி சீட்டு இல்லாமல் எடுத்துச் செல்கின்றனர். மேலும் ஏரியில் குறிப்பிட்ட அனுமதியை விட 20 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி மண் எடுக்கப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதுவரை 5 ஆயிரம் லோடுகளுக்கு மேல் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் எங்கள் கிராமத்திற்கு வரும் தார் சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்துள்ளது.

    அதிகளவில் பள்ளம் தோன்டி கிராவல் மண் எடுப்பதால் மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த மல்லிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர், ஊர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இதனை அடுத்து வழக்கம் போல் டிப்பர் லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தமிழகத்திலிருந்து தினசரி மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு இறை–ச்சிக்கு கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.
    • கேரளாவுக்கு மாடுகளை கொண்டு செல்ல இருந்த லாரியை சிவசேனா கட்சியினர் சிறை பிடித்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தமிழகத்திலிருந்து தினசரி மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு இறை–ச்சிக்கு கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மாட்டுச்சந்தை நடைபெறும் ஒட்டன்சத்திரத்துக்கு கேரள வியாபாரிகள் வருகை தந்து அதிக அளவில் கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை சிறைப்பிடித்து அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் லக்கையன் கோட்டை அருகே சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கேரளாவுக்கு மாடுகளை கொண்டு செல்ல இருந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    கேரளாவுக்கு மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய ஆவணங்களை சோதனை செய்ய அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் கேரளாவுக்கு அதிக அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அவர் தெரிவித்தார். எனவே இதனை தடுக்கும் விதமாக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்தார்.

    ×