search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி. கால்வாய்"

      உடுமலை:

      உடுமலையை அடுத்த எஸ்.வி.புரம் வழியாக பி.ஏ.பி. பகிர்மான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.இந்த நிலையில் தொப்புள் கொடியுடன் கூடிய பெண் சிசு உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்த தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

      அதன்பேரில் அங்கு விரைந்த உடுமலை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.குழந்தை இறந்து பிறந்ததா?அல்லது பெண் குழந்தை என்பதால் கால்வாயில் வீசிவிட்டனரா? ஏதேனும் முறை தவறிய உறவுக்கு பிறந்ததா? பெண் சிசு உடலை கால்வாயில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார் என்றும் தெரியவில்லை.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தொப்புள் கொடியுடன் கூடிய குழந்தையின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது.
      • பாசன நிலங்கள் 4 மண்டலமாக பிரித்து இரு ஆண்டுக்கு ஒரு முறை நீர் வழங்கப்படுகிறது.

      உடுமலை:

      பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன நிலங்கள் 4 மண்டலமாக பிரித்து இரு ஆண்டுக்கு ஒரு முறை நீர் வழங்கப்படுகிறது.

      பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து 165 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

      பாசன நிலங்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ள, பிரதான கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில் தளம் மற்றும் பக்கவாட்டு கான்கிரீட் சுவர்கள் இடிந்தும், மண் கால்வாயாக பல இடங்களில் மாறியுள்ளது.நீர்க்கசிவு காரணமாக பாசன நிலங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை மற்றும் மண்டல பாசன காலங்களில் கால்வாய் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பாதித்து வருகிறது.

      திருமூர்த்தி அணை துவங்கி வெள்ளகோவில் வரை, முழுமையாக பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 இடங்களில் 29.60 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.

      திருமூர்த்தி அணை அருகே ரூ.3 கோடி ரூபாய் மதிப்பில் பிரதான கால்வாய் கி.மீ., 1.20 முதல் 2.00 கி.மீ., வரை, உடுமலை கால்வாய் பிரியும் பகுதியில், மண் கால்வாயாக மாறியுள்ள பகுதியில் புதிதாக கான்கிரீட் கரை மற்றும் தளம் அமைக்கப்படுகிறது.

      மேலும் பிரதான கால்வாயின் கீழ் அமைத்துள்ள, தளி கால்வாய் சுரங்க வழித்தடம் சிதிலமடைந்த நிலையில் தற்போது சுரங்க கால்வாய் பகுதியில் முழுவதும் கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டு, தற்போது மேல் அமையவுள்ள பிரதான கால்வாய் தளம் மற்றும் கரைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இங்கு 60 சதவீதம் பணிகள் நடந்துள்ளது. அதே போல் பிரதான கால்வாய் கி.மீ., 3 முதல் 3.30 வரை, மொடக்குபட்டி செல்லும் ரோடு பாலம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணியும், தீபாலபட்டி பகுதியில் கரிசல் மண் பூமி காரணமாக ஒட்டுமொத்தமாக சிதைந்துள்ள 4.50 கி.மீ., முதல் 4.80 கி.மீ., வரை உள்ள பகுதியில் ரூ. 8.60 கோடி நிதியில் மறு சீரமைப்பு பணி நடந்து வருகிறது.இப்பகுதிகளில் கரையின் இரு பகுதியிலும் உள்ள மண் முழுவதும் அகற்றப்பட்டு, கம்பி கட்டி கான்கிரீட் அமைக்கும் பணி நடக்கிறது.

      மேலும் கெடிமேடு பகுதியில் கி.மீ., 20.60 முதல் 20.90 வரை உள்ள கால்வாய் சுரங்கபாதை ரூ.1.50 கோடி செலவிலும், ஆலம்பட்டி பகுதியில் உடைந்துள்ள கி.மீ., 32 முதல் 36 வரை மொத்தம் 4 கி.மீ., தூரம் கால்வாய் புதுப்பிக்கும் பணி ரூ.6 கோடி ரூபாய் மதிப்பிலும் நடந்து வருகிறது.

      அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில், திருமூர்த்தி கோட்டத்தில் 3 இடங்களில் கால்வாய் மறு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஆகஸ்டு 15ந்தேதிக்குள் பணியை நிறைவு செய்து 4ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்றனர்.

      • கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார்.
      • திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட இடம் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.

      உடுமலை:

      உடுமலை உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார்.உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை எடுத்துக் கூறி பேசினார்கள். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

      எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் திருமூர்த்திஅணை கட்டப்பட்ட போது பல்வேறு விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலத்தை தானமாக வழங்கினார்கள்.இதனால் பாசனத்திற்கு தண்ணீரும் குடிப்பதற்கு குடிநீரும் இன்றளவும் தடையில்லாமல் பெற்று வருகின்றோம். ஆனால் திருமூர்த்தி அணைக்கு வழங்கப்பட்ட இடம் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.அதை தவிர்க்க வேண்டும்.பொதுநல நோக்கோடு வழங்கப்பட்ட அந்த நிலங்களை அணைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மேலும் பிஏபி கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் போது திருட்டு நடைபெற்று வருவது தொடர்கதையாக உள்ளது. அதை தடுப்பதற்கு அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கடைமடை விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

      உடுமலை பகுதியில் கேபிள் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடுவதில்லை. உழவர் சந்தையில் இடம் பற்றாக்குறை காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் உழவர் சந்தைக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் தினசரி சந்தையை மேம்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். விவசாயிகள் பொதுமக்கள் அளிக்கின்ற புகார் மனுக்களுக்கு அதிகாரிகள் முறையாக பதில் அளிப்பதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் குறைகளுக்கு தீர்வு காண முடியாமல் பொதுமக்கள் விவசாயிகள் மாதக்கணக்கில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தளி பேரூராட்சி பகுதியில் அதிக அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டு உள்ளது. முறையான அனுமதி இன்றி எடுத்துச் செல்லப்பட்ட கிராவல் மண் சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் ஏழை எளிய மக்கள் மண் எடுப்பதற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.

      அமராவதி சர்க்கரை ஆலையில் இளம் சூடு ஏற்றுதல் தாமதமாக நடைபெறுகிறது.கரும்பு அறுவடைக்கு முன்பே பணியை முடித்திருக்க வேண்டும். நடவடிக்கை தாமதம் ஆவதால் கரும்பின் எடை குறைந்து விவசாயிக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது.எனவே கரும்பு அரவையை சர்க்கரை ஆலையில் விரைந்து தொடங்க வேண்டும். அதே போன்று நீராதாரங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. இதனால் மழை காலத்துக்குள் நீராதாரங்கள் ஆழப்படுத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது. மேலும் நீர் வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் உடுமலை பகுதி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டங்களில் நிலவும் குளறுபடிகளால் கடைக்கோடி கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அதுமட்டுமின்றி வேளாண்மை துறை,தோட்டக்கலைத்துறை, பொருளியல் துறை இணைந்த ஒருங்கிணைந்த வேளாண்மை துறை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகள் ஒருங்கிணைந்த சேவையை விரைந்து பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். உடுமலை மடத்துக்குளம் பகுதியில் நில அளவை பிரிவில் அளிக்கின்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ளது.அதற்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். மேலும் பொன்னாலம்மன் சோலை பகுதியில் இருந்து குழிப்பட்டி மலைவாழ் கிராமத்திற்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.அதை மீட்டு மலைவாழ் மக்கள் சமதள பகுதிக்கு வந்து செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.ஆனால் முகாமுக்கு வருகை தந்திருந்த துறை சார்ந்த அதிகாரிகளில் ஒரு சிலரே குறைகளுக்கு பதில் அளித்தனர்.மற்ற அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு அமர்ந்து இருந்தனர்.இதனால் விவசாயிகள் பொதுமக்கள் உரிய பதில் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.இந்த கூட்டத்தில் தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ உதவியாளர் ஜலஜா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

      • முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ளது.
      • பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது.

      உடுமலை :

      பிரதான கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

      பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆண்டு, டிசம்பர் 25-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, 5 சுற்றுகளாக 9,500 மில்லியன் கனஅடி நீர், திருமூர்த்தி அணையிலிருந்து வழங்கப்பட்டது.அந்த மண்டல பாசனம், மே மாதத்தில் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

      பி.ஏ.பி., பாசனத்துக்கு தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக பெறப்படும் தண்ணீரே ஆதாரமாக உள்ளது. இக்கால்வாயில் கி.மீ., 30 முதல் 49 வது கி.மீ., வரை புதுப்பித்தல் பணிக்காக 72 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.

      பணிக்கான நிர்வாக ஒப்புதல், பிப்ரவரி 2021ல், பெறப்பட்டது. இந்நிலையில் இந்த புதுப்பித்தல் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை.தென்மேற்கு பருவமழையால் தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகள் நிரம்பிய போதும், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது திருமூர்த்தி அணையின் நீர்மட்டம், 60 அடிக்கு 28.70 அடி மட்டுமே உள்ளது. ஆகஸ்டில், இரண்டாம் மண்டல பாசனம் குறித்த நேரத்தில் துவங்க, காண்டூர் கால்வாய் பணிகளை துரிதப்படுத்தி தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற வேண்டும்.

      திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., நான்கு மண்டலத்துக்குரிய 3.77 லட்சம் ஏக்கருக்கு பிரதான கால்வாய் வழியாகவே தண்ணீர் திறக்கப்படும். இந்த கால்வாய் பல இடங்களில் கரைகள் சரிந்து மண் கால்வாயாக மாறி விட்டது.தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிகள் பாதிப்பதாக வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்நிலையில் கரையில்லாத பிரதான கால்வாயில், நீரிழப்பு அதிகரிப்பதுடன் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பாசனம் பாதிக்கும் நிலை உள்ளது.இரண்டாம் மண்டல பாசனம் துவங்கும் முன் படுமோசமாக உள்ள கால்வாயில், அடிப்படை பராமரிப்பு பணிகளையாவது மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.தற்போதே பணிகளை துவக்கினால் மட்டுமே, ஆகஸ்டில் தண்ணீர் திறக்கும் போது பணிகளை முடிக்க முடியும்.

      முக்கிய கால்வாய்கள் பராமரிப்பே பரிதாபமாக உள்ள நிலையில், சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிளை கால்வாய்களில், தண்ணீர் திறக்கப்படும்.இதனால் இரண்டாம் மண்டல பாசன கால்வாய்களே தற்போது தேடினால் கிடைக்காது. முறையான பராமரிப்பின்றி, புதர் மண்டி கால்வாயை கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. உடுமலை கால்வாய், புதுப்பாளையம் கிளை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்பாவது பொதுப்பணித்துறையினர் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.வழக்கமாக அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு இரண்டு நாட்கள் முன் கரையிலும் கால்வாயிலும் உள்ள புதர்களை அகற்றி விட்டு பாசனத்துக்கு தயாராவது பொதுப்பணித்துறையினர் வழக்கமாக உள்ளது.

      பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கால்வாய்கள் நிலை இப்படி இருக்கும் போது, பாசன சபை கட்டுப்பாட்டிலுள்ள பகிர்மான கால்வாய்களின் நிலை படுமோசமாக உள்ளது. சமீபத்தில் பாசன சபைக்கு ஆர்வத்துடன் போட்டியிட்டு தேர்வான பாசன சபை நிர்வாகிகள் பகிர்மான கால்வாய்களை தூர்வார நிதியில்லாததால், திணறி வருகின்றனர்.வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பகிர்மான கால்வாய்களை தூர்வார மாவட்ட நிர்வாகத்துக்கு, கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கின்றனர்.நீர் வளத்தை பாதுகாக்க, பொதுப்பணித்துறையிலிருந்து நீர்வளத்துறையை தனியாக பிரித்த தி.மு.க., அரசு, இரு மாவட்டத்திலும், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பி.ஏ.பி., பாசனத்திட்ட மேம்பாட்டிலும் அக்கறை காட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

      • இரண்டாம் மண்டல பாசனத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
      • கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

      உடுமலை :

      பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக நான்கு மண்டலங்களில் 58 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வரும் இரண்டாம் மண்டல பாசனத்தில் இந்த வாய்க்காலில் 14,662 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

      இந்த கால்வாயில் போடிபட்டி, பள்ளபாளையம், அரசு கலைக்கல்லூரி பின்பகுதி, கணக்கம்பாளையம், எஸ்.வி., புரம், எஸ்.வி., மில் உட்பட பகுதிகளில், கால்வாயில் அனைத்து வகையான குப்பையும் கொட்டப்படுகிறது.குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால் கால்வாயே காணாமல் போகும் அவல நிலையில் உள்ளது. பாசனத்துக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது இத்தகைய குப்பை விளைநிலத்தில் தேங்குவதுடன், மண் வளத்தையும் பாதித்து வருகிறது. மேலும் பகிர்மான கால்வாய் ஷட்டர்களில் கழிவுகள் தேங்கி தண்ணீர் விரயமும் அதிகரிக்கிறது.

      பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பொதுப்பணித்துறை சார்பில் அவசர கதியில் உடுமலை வாய்க்காலில் உள்ள குப்பை அகற்றப்படுகின்றன.நீர் நிர்வாகம் மற்றும் மண் வளத்தை பாதிக்கும் இப்பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை சார்பில் கால்வாயில், குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் கம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டது. திட்டத்துக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாசன திட்டத்தை பாதுகாக்க உடனடியாக அரசு நிதி ஒதுக்கி நடப்பு சீசனில், பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

      ×